Friday, 1 May 2015

தள்ளிப்போன ‘உத்தம வில்லன்’: கலைப் புலி தானு பரபரப்புப் பேட்டி!!


கமல்ஹாசன், கே.பாலசந்தர், பூஜாகுமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘உத்தம வில்லன்’. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை, ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.
உழைப்பாளர் தின ஸ்பெஷலாக, மே 1ம் தேதி உலகம் முழுவதும், 1500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 400-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டது.
இதன்படி, கடந்த சில நாட்களாக, இப்படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கின. சில இடங்களில், முன்பதிவுகள் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே 5 நாட்களுக்கான டிக்கெட் புக் ஆகி விட்டதாம். ரசிகர்கள் மத்தியில், படத்துக்கு எதிர்பார்ப்பு எகிரிக் கிடந்தது. ரசிகர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் திரையரங்குகளில் படத்தைக் காண காத்திருந்த வேளையில், படத்தைத் திரையிடுவதற்கான "க்யூப்' தொழில்நுட்பங்கள் திரையரங்குகளை வந்து சேரவில்லை, எனவே காட்சி நேரம் தள்ளிப்போகும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த பிரச்சனை அப்படியே மெதுவாக வளர்ந்து காலை காட்சிகள் மட்டும் ரத்து என்று கூறப்பட்டது. ஒரு கட்டத்தில், படம் மே 1 அன்று முழுவதும் ரிலீஸ் கிடையாது என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து விட்டனர். படத்திற்கான சீட்டு கட்டணம் பார்வையாளர்களுக்கு திரும்பக் கொடுக்கப்பட்டது. ஆனால், இதே வேளை துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும், படம் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருந்தது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் திரையிடுவது தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஆர்பாட்டம் செய்தனர். சில இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் கூற்பபடுகிறது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தினர் "அஞ்சான்' படத்துக்காகவும், அதைத் தொடர்ந்து தயாரித்த ஒரு சில படங்களுக்காகவும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கியிருந்தனர். அந்தக் கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லையாம். அதனாலேயே "உத்தம வில்லன்' படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட சங்க நிர்வாகிகள், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருந்த நிதி நிறுவன நிர்வாகிகளிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. இந்தப் பேச்சுவார்த்தை நேற்று வெள்ளிக்கிழமை இரவு வரை நீடித்தாம். இதனால் "உத்தம வில்லன்' பட வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக, சென்னையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ‘கலைப்புலி எஸ்.தாணு’, இந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்று வந்த சமரசப் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் இன்று காலை உத்தமவில்லன் படம் வெளியாகும், என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment