Saturday, 30 May 2015

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி தெரியுமா??


இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.
இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.


இதன் மூலமாக,
ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்.
அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்.
அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்.
எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.
அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது.
இதற்காக பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அதிகாரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார்.
இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

No comments:

Post a Comment