Tuesday, 26 May 2015

சூர்யாவுடன் மோதும் புதுமுகங்கள்..!!


இளைய இயக்குநர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ஏ.ஆர் முருகதாஸின், பள்ளியிலிருந்து வந்த இரண்டு உதவி இயக்குநர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். படத்தின் பெயர் 'இருவர் ஒன்றானால்' .ஏ.எம்.சம்பத்குமார், அன்புஜி என்கிற உதவி இயக்குநர்கள் இருவர் ஒன்றாகி இணைந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள். இவர்களில் சம்பத்குமார்தான் தயாரிப்பாளர். அன்புஜி இயக்குநர்.
இப்படம் சூர்யா நடிக்கும் 'மாஸ்'படம் வெளியாகும் அதே மே29-ல் வெளியாகவுள்ளது. ஒரு நட்சத்திர நடிகர் சூர்யா படம் வெளியாகும் அதே தேதியில் முற்றிலும் புதுமுக நடிகர்கள் நடிக்கும் படத்தை வெளியிட இவர்களுக்கு என்ன துணிச்சல்? இதை ரமணா ஆர்ட்ஸ் சார்பில் தயாரிக்கும் . தயாரிப்பாளரான எம். சம்பத்குமாரிடம் கேட்ட போது " படத்தை விளம்பரப் படுத்தும்போதே 'பேய்ப்படங்கள் நடுவே ஒரு காதல்படம்' என்றுதான் டேக் லைன் வைத்துள்ளோம். சலிப்பூட்டும் பேய்ப்படம் பார்த்தும் வழக்கமான போரடிக்கும் காதல்படம் பார்த்தும் சோர்வடைந்துள்ள ரசிகர்களுக்கு நிச்சயம் இப்படம் புதுவித அனுபமாக இருக்கும்.அந்த நம்பிக்கையில் தான் வெளியிடுகிறோம்."என்கிறார்.


படம் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது.
"காதல் பற்றி ஆயிரம் சொல்கிறோம் ஆனால் தற்காலக் காதலின் பரிணாம வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று தெரியாமலேயே பலரும் எழுதி வருகிறார்கள். இந்தக் காதல்பற்றி நிறைய பொய்கள்,கற்பிதங்கள் சொல்லப் படுகின்றன. ஆனால் இன்றைய காதல் எப்படி உள்ளது.? என்று பலருக்கும் தெரிவதில்லை. காதல் புனிதமானது இல்லை. அசிங்கமானதும் இல்லை.
காதல் ...காதல்...காதல்... அந்தக் காதல் போயின்சாதல் என்றது அந்தக்காலம்.
காதல் ...காதல்...காதல்... அந்தக் காதல் போயின் இன்னொரு காதல் என்பது இந்தக்காலம்.
காதல் என்பது ஓர் உணர்வு .அது ஒரு குறிப்பிட்ட வயதில் வரும். கண்டு கொள்ளாவிட்டால் அடுத்த இடத்துக்குப் போய்விடும் .இதுதான் இன்றைய காதலின் இயல்பு. இன்றைய இளையதலைமுறை இப்படித்தான் காதலை அணுகுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நவீன காதலை மென்மையான காதலை நாகரிகமாகச் சொல்கிற படம்தான் 'இருவர்' ஒன்றானால்' "என்கிறார் அன்புஜி. முற்றிலும் புதுமுகங்கள் பங்கேற்கும் படம் என்றுஇதைத் தைரியமாகக் கூறலாம். இந்தப் படத்தில் இயக்குநர் அன்புஜி, தயாரிப்பாளர் ஏ.எம்.சம்பத்குமார்.
நாயகன் பி.ஆர்.பிரபு, நாயகி கிருத்திகா மாலினி,ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர், இசையமைப்பாளர் குரு கிருஷ்ணன், பாடலாசிரியர் நீலமேகம், எடிட்டர் பரமேஸ்வரன், கலை இயக்குநர் கலைமுருகன் ,நடனஇயக்குநர் பிரபு தனசேகர், . டிசைனர் ரசூல் என அனைவருமே புதுமுகங்கள்தான் குணச்சித்திர நடிகர்கள் 12 பேரும் கூட அறிமுகங்கள்தான். அது மட்டுமல்ல கதையும் புதிது என்று நம்புகிறது படக்குழு.
எல்லாமே டிஜிட்டல் மயமாகி சினிமாவை மலிவாக்கி விட்ட இன்றைய சூழலில் ஒருபாடல் தவிர முழுப்படமும் பிலிமில் உருவாகியுள்ளது. படத்தில் 5 பாடல்கள் உள்ளன.சென்னை, பெங்களூர் பாண்டிச்சேரி, ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. திட்டமிட்டு 60 நாட்களில் படப்பதிவை முடித்துள்ளனர்.
படத்தை பார்க்க வந்த தணிக்ககைக்குழு 'ஐயோ காதல் கதையா?' என்று சோர்வுடன் வந்து அமர்ந்தவர்கள் ,பார்த்து முடித்ததும் வியந்துள்ளனர். உற்சாகமடைந்து பாராட்டியிருக்கிறார்கள். "இப்படத்தின் கதை கல்லூரியின் பின்னணியில் நகர்கிறது. இது இயக்குநர் கதிரின் ஒருபடம் போல இளமை, கலர்ஃபுல், கலகலப்பு என எல்லாம் கொண்டதாக இருக்கும்.
படத்தில் விரசமில்லை. காதலன் காதலி அணைப்பு காட்சிகள் கூட இல்லை.ஏன் காதலர்கள் தோளில் கை போடும் காட்சி கூட இல்லை. இது சினிமாவைப் புரட்டிப் போடும் புதுமைப்படம் என்றெல்லாம் சொல்ல விரும்ப வில்லை இது ஒரு நம்பிக்கையான படம் என்பேன். அந்த நம்பிக்கை எண்ணத்தில்தான் இதை இப்போது வெளியிடுகிறோம்.'' என்கிறார். இயக்குநர்.
அவரது நம்பிக்கையின் ரகசியம் மே -29ல் திரைகளில் தெரியும்.

No comments:

Post a Comment