Tuesday, 26 May 2015

”கொல்லைப்புறமா வந்து பதவியேற்றதுக்கா இவ்வளவு அலப்பரை??”


சொத்து குவிப்பு வாக்கில் விடுதலையான செல்வி ஜெயலலிதா கடந்த 23ம் தேதி, தொண்டர்களின் பெரும் கொண்டாட்டத்துக்கு மத்தியில் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த பதவியேற்பானது, நன்கு திட்டமிடப்பட்டு, சட்டரீதியாக கச்சிதமாக நடந்தது. இந்நிலையில், இந்த பதவியேற்பை விமர்சித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெறாமல், சட்டத்தையும் மனசாடியையும் ஏமாற்றி கொல்லைப் புறமாக வந்து பதவியேற்றதற்கா இவ்வளவு பெரிய கொண்டாட்டம்? என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
ஜெயலலிதா, சென்னை மாநகரில் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பற்றியோ, சட்ட விதிமுறைகளைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல், கொண்டுவந்து குவிக்கப்பட்ட கட்சிக்காரர்களின் கொண்டாட்டங்களுக் கிடையே, மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்று ஜனநாயக ரீதியாக மக்களிடம் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தற்போது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா என்றால் கிடையாது.
ஜெயலலிதா தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய்க்கான சொத்துக்களைச் சேர்த்தார் என்ற வழக்கு கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று, இறுதியாக கடந்த ஆண்டு செப்டம்பர் திங்கள் 27ஆம் தேதி, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்களால், நான்காண்டு காலம் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டிக்கப்பட்டு சிறையிலே இருந்த ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வர முயற்சி செய்து, உச்ச நீதிமன்றம் வரை அந்த வழக்கு சென்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டத்து அவர்கள், முறைப்படி கேட்கப்பட வேண்டிய; கர்நாடக அரசின் கருத்தைக்கூடக் கேட்காமல், வெகுவேகமாக விசாரித்து, நீதிமன்றத்தின் முன் வைக்கப்படாத கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டு 17-10-2014 அன்று ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்தார்.
அவ்வாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவித்து, இதே போன்ற வேறு வழக்குகளில் மேற்கொள்ளப்படாத வியப்புக்குரிய முன்மாதிரியாக ஜெயலலிதாவின் அப்பீல் மனுவை மட்டும் கர்நாடகா உயர் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டுமென்று காலவரம்பு நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்த போது, அந்தத் தீர்ப்பு பற்றியும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டத்து அவர்கள் பற்றியும் அப்போதே கடுமையான விமர்சனங்கள் இந்தியா முழுவதும் ஏடுகளில் வெளிவந்தன.
அதன் பிறகு ஜெயலலிதா செய்த மேல்முறையீட்டின் மீது பெங்களூர் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் ஜனவரி 5 துவங்கி மார்ச் 11 வரை வழக்கு நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களிடம் நீதிமன்றத்திலேயே, விசாரணையின் போதே, அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி அவர்கள் அவ்வப்போது தனது மன ஓட்டத்தின் பிரதிபலிப்பாகப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து, அந்தக் கருத்துகள் எல்லாம் ஏடுகளிலே தொடர்ந்து வெளிவந்தன.
குறிப்பாக அவர்களுடைய வாதத்தில் குற்றச்சாட்டுகளை முழுவதும் மறுப்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் எடுத்துக்காட்டப்படவில்லை என்றும், குன்ஹா அவர்களின் தீர்ப்பிலே போடப்பட் டிருந்த 150க்கு மேற்பட்ட முடிச்சுகள் எதையும் அவிழ்க்கவில்லை என்றும், அவர்களின் வாதத்தில் போதிய மதிப்பெண்கள் பெறவில்லை என்றும், குன்ஹா அளித்த தீர்ப்பையே மீண்டும் தான் தரவேண்டிய நிலைதான் உள்ளதென்றும் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். எனவே தன்னிச்சையாகப் பல்வேறு நாட்களில் வழக்கு குறித்து தெரிவித்த எதிர்மறைக் கருத்துகளின் மூலம், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு எவ்வாறு அமையப் போகிறது என்று முன்கூட்டியே பல தரப்பினராலும் யூகிக்கப்பட்டது.
இதற்கிடையே உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு (நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரபுல்ல சி. பந்த் அடங்கியது) அளித்த ஒரு தீர்ப்பில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வரவிருந்த தீர்ப்பைப் பற்றிக் குறிப்பிடும் போது, "குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றத்தின் முக்கியத்துவத்தை உயர்நீதிமன்ற நீதிபதி (குமாரசாமி) கருத்திலே கொள்ள வேண்டும். சமூகத்தை; ஊழல், எப்படி (கரையான் போல) அரித்து வருகிறது என்பது குறித்து உயர் நீதிமன்றம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் முன்னுள்ள சாட்சியங்களை முழுமையாகவும் ஒருங்கிணைத்தும் மதிப்பீடு செய்து தீர்ப்பளிக்க வேண்டும். விருப்பு வெறுப்பின்றி அளிக்கும் தீர்ப்பு பாரபட்சமின்றி தீர்க்கமாக எடுத்துரைக்கப்பட வேண்டும்" என்று மிக வலிமையான அறிவுரைகள் வழங்கப்பட்டன. இன்னும் சொல்லப்போனால், அரசியல் சாசன அமர்வுக்குக் காரணமான இந்த வழக்கிலே, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் அவர்கள், "ஒரு கிரிமினல் வழக்கை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு இந்த மேல் முறையீடு வழக்கு ஒரு சான்று.
கிரிமினல் வழக்குகளில் நீதி வழங்கும் முறை தோற்றுவிட்டது. இதைச் சீர்படுத்த வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது" என்று இந்த வழக்கு எப்படிப்பட்ட பின்னடைவுகளை நீதித் துறையிலே ஏற்படுத்தி வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தார். உச்ச நீதிமன்ற அமர்வு இவ்வாறு எந்த வழக்கிலும் இல்லாத அளவுக்கு அசாதாரணமான கருத்துகளைத் தெரிவிக்கக் காரணம் என்ன? உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களே பெங்களூர் வந்ததாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கிடைத்திடச் செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் பரவலாகப் பேசப்பட்டன என்ற போதிலும், நாம் அவற்றைக் கிஞ்சிற்றும் நம்பவில்லை.
11-5-2015 அன்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பில் ஜெயலலிதாவை இந்த வழக்கி லிருந்து விடுதலை செய்தார். அதனை அ.தி.மு.க.வினர் எதிர்பாராதது நடந்தே விட்டது என எண்ணி வெற்றியாகக் கொண்டாடினர். ஜெயலலிதாவும் தனது மனசாட்சிக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு நெடுந்துயில் கொள்ளச் செய்துவிட்டு நீதி வென்றதாக அறிக்கை விடுத்தார். நம்மைப் பொறுத்தவரையில் நீதிபதி குமாரசாமி நீதிமன்றத்தில் விசாரணை நடத்திய போது கூறிய மொழிகளுக்கும், வழங்கிய தீர்ப்புக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறதே என்ற சந்தேகம் வந்தது.
ஆனால் தீர்ப்பையே திருப்பிப் போட்டு, திகைக்க வைக்கின்ற அளவுக்கு அடுத்த நாளே தீர்ப்பிலே உள்ள மிகப் பெரிய தவறுகள் மற்றும் குளறுபடிகள் குறித்து பலரும் தங்கள் கருத்துகளை அச்சமின்றி வெளிப்படையாகத் தெரிவித்தனர். நானும் அந்தத் தீர்ப்பினை ஊன்றிப் படித்த போது, மிகப் பெரிய கணிதப் பிழையினைக் கண்டேன். அந்தப் பிழையே தீர்ப்புக்கு அடிப்படைக் காரணியாக அமைந்திருந்ததையும் உணர்ந்தேன். மன்னன் பாண்டிய நெடுஞ்செழியன், தான் தவறாகத் தீர்ப்பு அளித்து விட்டதை அறிந்தவுடன், "யானோ அரசன், யானே கள்வன்" என்று மனதார ஒப்புக் கொண்டு, அரியாசனத்திலிருந்து உருண்டு விழுந்து உயிர் துறந்தான்.
அதன் மூலம் "நீதி வழுவா நெடுஞ்செழியன்" என்ற புகழ்ப் பெயர் நிலைத்திடலாயிற்று. அவன் நீதி தெரிந்தவன் - நீதி உணர்ந்தவன்! ஜெயலலிதா தரப்பினர் இந்தியன் வங்கியிலே பத்து முறை கடன் பெற்ற தொகைகளையெல்லாம் நீதிபதி குமாரசாமி, வரிசையாகக் குறிப்பிட்டு, அதையெல்லாம் கூட்டி 24 கோடி ரூபாய் அவர்கள் கடனாகப் பெற்றிருப்பதாகவும், அந்தத் தொகையை வருவாயாக எடுத்துக் கொண்டால், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு அவருடைய உண்மையான வருமானத்தில் 8 சதவிகிதம் தான் என்றும், அவ்வாறு பத்து சதவிகிதத்திற்குக் குறைவாக வருவாய்க்கு அதிகமாகச் சொத்து சேர்க்கப்பட்டிருந்தால், அதனைக் குற்றமாகக் கருதி தண்டனை வழங்கத் தேவையில்லை என்றும் எழுதித்தான் இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா தரப்பினரை விடுதலை செய்திருக்கிறார்.
இந்த விவரங்கள் உண்மையானவையாக, நிரூபிக்கக் கூடியவையாக இருந்தால், ஜெயலலிதாவின் விடுதலை பற்றி இருவேறு கருத்துகளுக்கே இடம் கிடையாது. ஆனால் ஜெயலலிதா தரப்பினர் இந்தியன் வங்கியிலிருந்து பெற்ற கடன்கள் என்று வரிசையாகப் பட்டியலிட்டு, அதன் கூட்டுத் தொகை 24 கோடி ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பிலே தெரிவித்திருப்பது முற்றிலும் தவறான புள்ளி விவரமாகும். எப்படியென்றால், ஜெயலலிதா தரப்பினர் பத்து முறை இந்தியன் வங்கியிலே கடன் பெற்ற அந்த பத்து தொகைகளையும் கூட்டினால், பத்து கோடி ரூபாய்தான் வருகிறதே தவிர, நீதிபதி தெரிவித்தவாறு 24 கோடி ரூபாய் என்று கூட்டுத் தொகை வர வாய்ப்பே இல்லை. உண்மையான கூட்டுத் தொகையின்படி பார்த்தால், ஜெயலலிதா அவருடைய வருவாயை விட 76 சதவிகிதம் கூடுதலாகச் சொத்துக் குவித்திருக்கிறார்.
76 சதவிகிதம் என்பது கூட தவறு; எல்லா தவறுகளையும் சேர்த்தால் 119 சதவிகிதத்திற்கு மேல் சொத்துக்களை ஜெயலலிதா குவித்துள்ளார் என்றும் அதன்படி அவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன. அது மாத்திரமல்ல; வருவாய்க்கு மேல் சொத்துக் குவிப்பு பத்து சதவிகித அளவுக்குள் இருந்தால், அதற்குத் தண்டனை இல்லை என்ற விதி, தற்போது நடைமுறையிலே உள்ள ஊழல் தடுப்புச் சட்டத்திலே இடம் பெறவில்லை என்றும், 1988ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போதே இந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத் தில் அப்படிப்பட்ட ஓர் அம்சம் இடம் பெறவில்லை என்றும் விரிவாகவும், விளக்கமாகவும் பலராலும் எடுத்துக் கூறப்பட்டது.
இந்த விவரங்களை யெல்லாம் பலரும் எடுத்துக் காட்டி, தீர்ப்பின் அடிப்படையிலேயே இவ்வாறு இமாலயத் தவறு உள்ளது, எனவே இந்தத் தீர்ப்பை மாற்ற வேண்டும், அதற்கு உதவியாக இந்த வழக்கில் முக்கிய முதல் நிலைப் பங்காற்றி வரும் கர்நாடக அரசுதானே உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கில நாளிதழ்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள "தி டைம்ஸ் ஆப் இந்தியா" ஏட்டில், - 22-5-2015 அன்று - மூத்த செய்தியாளர், ஏ. சுப்ரமணியம் என்பவர்; ஜெயலலிதாவின் வழக்கில் குமாரசாமி அளித்த தீர்ப்பு பற்றி மிகவும் விளக்கமாக "Curious Case of Amma Assets : Overlooking the obvious" - From Calculation To take on Gifts, Karnataka High Court Order has many Loopholes - என்ற தலைப்பிட்டு எழுதியுள்ளார்.
அதுபோலவே, பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் என்ற பெண்மணி இந்த வழக்கு பற்றி நன்கு ஆய்ந்தறிந்து "More than Bad Maths : Four Big Errors That Let Jayalalithaa off the Hook" என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 919 பக்கத் தீர்ப்பில் வழக்கத்துக்கு மாறான பல செய்திகளும், முடிவுகளும் இடம் பெற்றுள்ளன என்று குறிப்பிட்டுப் பல ஏடுகளும் வெளியிட்டுள்ள அசைக்க முடியாத வாதங்களில் சிலவற்றை மட்டும் சுருக்கமாகக் கூறுகிறேன்.
அதாவது ஜெயலலிதா தரப்பினர் இந்தியன் வங்கியிலே வாங்கிய பத்து கடன் தொகை களைக் குறிப்பிட்டு, அதன் கூட்டுத் தொகை 24 கோடி ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பிலே தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்தப் பத்துக் கடன் தொகைகளையும் யார் கூட்டி னாலும் 10 கோடி ரூபாய்தான் வருகிறது. பத்து கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற்றிருக்க, நீதிபதி குமாரசாமி 24 கோடி ரூபாய் கடன் பெற்றதாக மிகைப்படுத்திக் கூறி, ஜெயலலிதா தரப்பினரை வழக்கிலிருந்து விடுதலை செய்திருக்கிறார்.
எனவே கூட்டுத் தொகையில் 14 கோடியை அதிகமாகச் சேர்த்துச் சொல்லி, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வங்கியிலிருந்து பத்து முறை வாங்கப்பட்ட கடன் தொகைகளில், இந்தியன் வங்கியிலிருந்து ஜெயா பப்ளிகேஷன்ஸுக்காக பெறப்பட்ட 1.5 கோடி ரூபாய் கடன் திருப்பி செலுத்தப்பட்டிருக்கிறது. இதை விசாரணை நீதிமன்றமும் முறையான செலவு என ஏற்றுக்கொண்டு விட்டது. வாங்கப்பட்ட கடன்களில் வரிசை எண் 8இல் 1.57 கோடி ரூபாய் சுதாகரன் கடன் பெற்றதாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பிலே காட்டி யிருக்கிறார்.
ஆனால் உண்மை என்னவெனில், சுதாகரன் 1.57 கோடி ரூபாய் கடன் கேட்டு இந்தியன் வங்கிக்கு விண்ணப்பம் கொடுத்த போதிலும் - வங்கி 1.33 கோடி ரூபாய்தான் கடன் வழங்க அனுமதித்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கினை சிறப்பு நீதிமன்றம் விசாரித்த போது, உண்மையாக சுதாகரன் கடனாகப் பெற்ற 1.33 கோடி ரூபாயை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டது. ஆனால் நீதிபதி குமாரசாமி, சுதாகரன் கடன் கேட்டு விண்ணப்பித்த 1.57 கோடி ரூபாயை, அவர் கடன் பெற்றதாகக் கூறி, கணக்கிலே எடுத்துக்காட்டி குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்திருக்கிறார்.
நீதிபதி குமாரசாமி வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதையும், வருமான வரி செலுத்து வதையும், வருவாய்க்கான ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் 2014இல் சுரேஷ்ராஜன் வழக்கில் வருமானவரி செலுத்துவது மட்டுமே நேர்மையான வழியில் சொத்து சேர்ந்ததற்கான ஆதாரம் எனக் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்த வழக்கில் நீதிபதி குமாரசாமி வருமான வரி கணக்கையும், வருமான வரி செலுத்தியதையும் வருமானத்திற் கான ஆதாரமாக ஏற்றுக் கொண்டது சரியல்ல என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா' ஏடு கூறுகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், "உச்ச நீதிமன்றம் வருவாய்க்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது சம்மந்தமான பல வழக்குகளில், வருவாய் வந்ததற்கான ஆதாரம் ஏற்றுக் கொள்ளும் வகையில் தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்" என்றும்; "வருமான வரித் துறை, வருவாய்க்கான ஆதாரத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதில்லை. எனவே, வருமான வரிக் கணக்கை வருவாய்க் கான ஆதார ஆவணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என்றும் கூறியிருக்கிறார். ஜெயலலிதாவின் 44வது பிறந்த நாளுக்காகத் தரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் பரிசுகளை அவருடைய வருமானமாக நீதிபதி குமாரசாமி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இது நெறிமுறைக்கு மாறாக உள்ளது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா' எழுதியுள்ளது. மேலும் வருமான வரி கட்டுவதன் மூலம், சட்ட விரோதமான சொத்தின் மீது களங்கம் துடைக்கப்பட முடியாது. பொது ஊழியர் களுக்கான நடத்தை விதிகளில் பரிசுகளைப் பெற்றுக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. பரிசுகளை, வருமானத்துக்குரிய சட்டப்பூர்வ மான வழியாக ஏற்றுக் கொண்டால், அது ஊழல் தடுப்புச் சட்டத்தின் முக்கிய நோக்கத்தையே வீழ்த்தி விடும் என்று அந்த ஆங்கில நாளிதழ் குறிப்பிடுகிறது. தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை நீதிபதி குமாரசாமி ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், பிறந்த நாள் பரிசுகளையும், வெளி நாட்டிலிருந்து அனுப்பப் பட்ட பரிசுப் பணத்தையும் வருமானமாகச் சேர்த்துக் கொண்டதும் ஆச்சரியமான செய்தி யாகும்.
77 இலட்சம் ரூபாய் வெளிநாட்டுப் பணம் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 2012ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்திலே வழக்கு நிலுவையிலே இருந்து வருகிறது. ஆனால் நீதிபதி குமாரசாமி அதற்குள்ளாகவே தன்னிச்சையாக அதை வருமானமாக எடுத்துக் கொண்டு, தனது தீர்ப்பிலே ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார். அன்னியச் செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின்படி (FER-A) அமைச்சராக இருக்கும் ஒருவர், வெளிநாடுகளிலிருந்து பரிசுப் பொருள்களைப் பெறுவது முற்றிலும் தடை செய்யப்பட்டிருக் கிறது.
எனவே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து கொண்டு 77 லட்ச ரூபாய்க்குப் பரிசுத் தொகையாகப் பெற்றிருப்பது அன்னியச் செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின்படி குற்றமாகும். எனவே நீதிபதி குமாரசாமி, உச்ச நீதிமன்றத்திலே நிலுவையிலே உள்ள வழக்கின் முடிவைப் பற்றிக் கவலைப்படாமலும், "பெரா" சட்டத்தை மதிக்காமலும் தீர்ப்பளித்திருக்கிறார். 28 கோடி ரூபாய்க்கு கட்டுமானச் செலவு செய்து, கட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையில், நீதிபதி குமாரசாமி அதை மிகவும் குறைத்து 5 கோடி ரூபாயாகக் குறைத்து விட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதை நிரூபிப்பதற் கான ரசீதுகளையோ, வவுச்சர்களையோ, பொறியாளர்களின் அறிக்கைகளையோ, கட்டிடம் கட்டியவரின் அறிவிப்புகளையோ தாக்கல் செய்யவில்லை என்றும் "டைம்ஸ் ஆப் இந்தியா" விளக்கியிருக்கிறது. கட்டுமானப் பொருள்களுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் விலையை நீதிபதி குமாரசாமி ஏற்றுக் கொள்ளாதது தவறு என்றும், கட்டுமானப் பொருள்களுக்கும் அரசின் பொதுப்பணித் துறை நிர்ணயிக்கும் விலையைத்தான் நீதிமன்றங்கள் அனைத்தும் ஏற்றுக் கொண்டு வரும் நிலையில், நீதிபதி குமாரசாமி அவர்கள் பொதுப்பணித் துறை நிர்ணயம் செய்த தொகையை ஏற்றுக் கொள்ள வில்லை என்பது, ஏதோ நீதிபதி வலிந்து குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கு அனுசரணையாக முக்கியமான தீர்ப்புகளையும், சட்டங்களையும் மீறி முடிவெடுத்துள்ளாரோ என்று சந்தேகிக்கவைக்கிறது.
நீதிபதி குமாரசாமி அவர்களே தனது தீர்ப்பு, பக்கம் 875இல் "பின் யோசனையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கு நம்பத்தக்க தல்ல" என்றும்; "பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கையே தாக்கல் செய்யாமல் இருப்பது வருமான வரி செலுத்த வேண்டியவரின் உரிமை யைப் பறித்து விடுகிறது. நீண்ட காலதாமதத் திற்குப் பின் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதும், உரிய நேரத்தில் தாக்கல் செய்யாது இருப்பதும் "நமது எம்.ஜி.ஆர்." சந்தா திட்டத்தின் உண்மைத் தன்மையில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்றும் கூறி விட்டு, "நமது எம்.ஜி.ஆர்." சந்தா திட்டத்தின் மூலமாக 4 கோடி ரூபாய் வருமானத்தை ஏற்றுக் கொண்டிருப்பது முன்னுக்குப் பின் முரணானது ஆகும்.
இது எப்படியிருக்கிறதென்றால், ஒருவர் தன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் வரை, காத்திருந்து விட்டு அதற்குப் பின்னர் அடையாளம் காட்ட முடியாத வருமானத்தையெல்லாம் இணைத்து வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து விட்டால், சட்டத்தின் பிடியி லிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற எண்ணத்தோடு, "நமது எம்.ஜி.ஆர்." சந்தா திட்டமே உருவாயிற்றோ என்று எண்ணத் தோன்றுகிறதா இல்லையா? இப்படிச் செய்வதால் நமது சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளில் ஏற்படும் தாக்கத்தை நீதித் துறை விழிப்புணர்வோடு உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த ஓய்வு பெற்ற நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
என்.டி.டி.வி. தொலைக்காட்சி தெரிவித்த செய்தியில், வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா வாங்கிக் குவித்த சொத்தின் மதிப்பீடு, கட்டிடங்களின் தளம் போடுவதற்கான செலவை மாற்றி அமைத்ததில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என்றும், சதுர அடிக்கு 310 ரூபாய் என்பது 250 ரூபாயாகக் குறைக்கப்பட்டதால், 22 கோடி ரூபாய் குறைந் துள்ளது என்றும் அம்பலப்படுத்தியிருக்கிறது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கருணானந்தி, "உச்ச நீதிமன்றம் கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி வழக்கில் வழங்கிய தீர்ப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட் டிருக்கிறது.
வருவாய்க்கு மீறிய சொத்து பத்து சதவிகிதம் வரை இருக்குமானால், குற்றஞ் சாட்டப்பட்டோர், விடுதலை பெற உரிமை உள்ள வர்கள் என்று நீதிபதி குமாரசாமி சுட்டிக்காட்டி யிருக்கிறார். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவில் எந்த இடத்திலும், இவ்வாறு குறிப்பிடப்படவில்லை" என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதற்கிடையே இந்த வழக்கினைச் சட்ட விதி முறைகளின் இயல்பான அடுத்த கட்டமாக மேல் முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படாமலேயே தடுத்து சட்டத்தின் வாயை அடைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
தீர்ப்பிலே எல்லோருக்கும் எளிதில் புரியக்கூடிய கூட்டுத் தொகையிலே பெருந்தவறு இல்லாமல் இருந்திருந்தால் கூட, மேல் முறையீடு தேவையில்லை என்று கூறலாம். ஆனால் மாபெரும் தவறு நடைபெற்றிருக்கும்போது, ஏற்பட்டிருக்கும் தவறு அனைவருடைய கவனத்திற்கும் தெரிந்திருக்கும் போது, மேல் முறையீடு செய்யாமல், அந்தத் தவறான தீர்ப்பின் அடிப்படையில் அவசரம் அவசரமாக ஜெயலலிதா இவ்வாறு மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்பது சட்ட விதிமுறைகளின்படி சரிதானா?
நேர்வழியில் நிமிர்ந்து வந்து பதவி ஏற்காமல், சட்டத்தின் கால்களைக் கட்டிப் போட்டு விட்டு, மனசாட்சிக்கும் விடை கொடுத்து விட்டு, கொல்லைப்புற வழியாக வந்து பதவி ஏற்பதற்கா இவ்வளவு பெரிய கொண்டாட்டம்? தவறான தீர்ப்பின் அடிப்படையிலே ஜெயலலிதா முதல் அமைச்சராகப் பதவியேற்க அரசியல் சட்டத்தின் பிரதிநிதியான தமிழக ஆளுனரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறாரா?

No comments:

Post a Comment