Saturday, 30 May 2015

IIT விவகாரம்: நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும்!! மாணவர்கள் மிரட்டல்!!


கடந்த இரு தினங்களாக, சென்னை மற்றும் தேசிய அளவில் ஒரு கலக்கி வருகின்றனர் மாணவர் அமைப்பினர்.
சென்னை ஐஐடி மாணவர்கள் சேர்ந்து நடத்தி வந்த அமைப்பு, ஏ.பி.எஸ்.சி. பெரியார், அம்பேத்கார் வட்டம் என்ற பொருள்படும் இவ்வமைப்பு, பகுத்தறிவுக் கருத்துக்களையும், மூட நம்பிக்கை எதிரான விழிப்புணர்வுகளையும் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சிறு பிரச்சாரங்கள் மூலம் மக்களிடையே பரப்பி வந்தது.
இதற்கிடையில், இவ்வமைப்பு மத்திய அரசுக்கு எதிராகவும், இந்துத்துவத்துக்கு எதிராகவும், செயல்படுவதாக மத்திய மனித வள அமைச்சகத்துக்கு அடையாளம் தெரியாத யாரோ கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த கடிதத்தின் பேரில், விளக்கம் அளிக்க வேண்டும், என்று மத்திய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணைச் செயலர் பிரிஸ்கா மேத்யூ, சென்னை ஐஐடிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இதை அடுத்து, கடந்த 24ம் தேதி சென்னை ஐஐடி தலைமை, அரசுக்கு எதிராக கொள்கைகள் பரப்புவதாகக் கூறி பெரியார், அம்பேத்கார் வட்டம் என்ற ஏ.பி.எஸ்.சி மாணவர் அமைப்புக்கு தடை விதித்தது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இராணியின் இல்லத்தின் வெளியில் மாணவர் அமைப்பினர் போரட்டம் செய்தனர்.
மத்திய அரசுக்கும், இந்துத்துவ அமைப்புகளுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி வந்தனர். இதனால், இவ்விவகாரம் தேசிய அளவில் சூடு பிடித்தது. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினரும், இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று ஐஐடி வாளாகத்தின் முன், மாணவர் அமைப்பினர் பலர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களைப் போலீஸார் கைது செய்தனர். இவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க., தலைமையகமான சாஸ்திரி பவனில், காங்கிரஸ் கமிட்டியின் ஆதிதிராவிடர் பிரிவினர் போராட்டம் செய்தனர். இவர்களையும் போலீஸார் கைது செய்தனர். இதைத் அடுத்து மாணவர் அமைப்பினருக்கு ஸ்டாலின், வைகோ, உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சியினரும் ஆதரவளித்து வருகின்றனர்.
”பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதும், அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளை பரப்புவதும், பெரும் குற்றம் என்பதுபோல ஐ.ஐ.டி. நிர்வாகம் சித்தரித்து மாணவர் அமைப்புக்கு தடை விதிப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும். மக்களாட்சியில், அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படைக் கருத்து உரிமையை பறிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்பதை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உணர வேண்டும்.” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், போராட்டம் முடிந்த உடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள், ஏ.பி.எஸ்.சி மீதான தடையை நீக்கா விட்டால் இந்திய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து மாணவர்கள் தெரிவித்துள்ளதாவது:
ஏ.பி.எஸ்.சி அமைப்புக்கு தடை விதித்தது மாணவர்கள் மீதான உளவியல் போர் என்றும், மாணவர் அமைப்பின் தடையை நீக்காவிட்டால் தொடர்ந்து போராடுவோம். மேலும், இந்துத்துவா மாணவர் அமைப்புகள் கருத்துகளை கூறியபோது தடை விதிக்காது ஏன்.
தடையை உடனடியாக ஐஐடி நிர்வாகம் நீக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் தேசிய அளவில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். ஏ.பி.எஸ்.சி மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை என உறுதி தர வேண்டும் என்றும், உறுதிதர தவறும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் முதல்கட்டமாக கல்லூரி தோறும் போராட்டம் நடத்தப்படும்.
பிற மாநிலங்களில் உள்ள மாணவர் அமைப்புகளை ஒன்று திரட்டவும் முடிவு செய்துள்ளதாகவும், தெலங்கானா, ஆந்திர மாநில மாணவர்களின் ஆதரவை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கடவுளையே விமர்சித்த மண் தமிழகம், மோடி அரசை விமர்சிப்பது மாணவர் உரிமை என்று கூறிய மாணவர் அமைப்பினர், மாணவர் உரிமையை தடுக்க நினைக்கும் செயல் சர்வாதிகார போக்கு கொண்டது. ஐஐடி நிர்வாகத்தின் இந்த சர்வாதிகார போக்கை முழுமையாக ஒடுக்கும் வரை போராட்டம் தொடரும்.

No comments:

Post a Comment