Thursday, 28 May 2015

லிங்கா பிரச்சினை: சிங்காரவேலனின் சதியும், வில்லத்தனமும்..!


ரஜினி நடிப்பில் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட லிங்கா படம், விநியோகஸ்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. படம் வெளிவந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தொடர்ச்சியாக போராட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என விநியோகஸ்தர்கள் இறங்கினர்.
இதனைத் தொடர்ந்து மொத்த நஷ்டமான 33 கோடிக்கு தயாரிப்பாளர் சங்கம், ரஜினி தரப்பில் திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டார்கள். அப்பேச்சுவார்த்தையில் இறுதியில் 12.5 கோடி ரஜினிகாந்த் தரப்பில் தாணு மற்றும் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கொடுத்ததாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்தார்.
அதனால் அந்தச் சிக்கல் முடிவுக்கு வந்துவிட்டதென்றும் சொல்லப்பட்டது. அது குறித்த ஒப்பந்தப் பத்திரம் கையெழுத்திடப்பட்டு, அதை தாணுவிடமிருந்து பெறுவது போல போஸ் கொடுத்த விநியோகஸ்தர் சிங்காரவேலன்தான், இப்போது ரஜினி வேந்தர் மூவீஸுக்கு படம் பண்ண வேண்டும் அல்லது மேலும் ரூ 15 கோடி தர வேண்டும் என பேட்டியளிக்கிறார்.
கடந்த மே 26 ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிங்கார வேலன், 'சொன்னபடி பணம் வரவில்லை. ஐந்து கோடியே தொண்ணூறு லட்சம்தான் கொடுத்திருக்கிறார்கள். மீதமுள்ள பணத்தை இன்னும் கொடுக்கவில்லை. இதற்கான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இன்னும் எட்டப்படவில்லை.
முதலில் 12.5 கோடி என்பதை ஒப்புக்கொண்டதற்குக் காரணமே, அடுத்து ரஜினி வேந்தர் மூவிஸூக்கு ஒருபடம் நடித்துத் தருவார் என்றும் அந்தப் படத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் இணை தயாரிப்பாளர்களாகி விடுங்கள். அந்தப் படத்தில் கிடைக்கும் லாபம் உங்களுக்கு முழுமையான நிவாரணமாக இருக்கும் என்று ரஜினி சார்பில் திருப்பூர் சுப்பிரமணி வாய் மொழியாகச் சொன்னதால் தான் என்று தெரிவித்தார்.
ஆனால் இதுபற்றி திருப்பூர் சுப்பிரமணியிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, இது மிகப்பெரிய பொய் என்றார். 12.5 கோடியில் 6.5 கோடியைக் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்களே? எங்களுக்கு ராக்லைன் வெங்கடேஷிடமிருந்து ஆறு கோடிதான் வந்தது. அதைப் பிரித்துக் கொடுத்துவிட்டோம். மீதிப்பணம் வந்ததும் அதையும் பிரித்துக் கொடுத்துவிடுவோம். அவர் மகள் கல்யாணம் முடிந்ததும் இந்த செட்டில்மென்ட் முடிந்துவிடும்.
ராக்லைன் வெங்கடேஷ் மொத்தத் தொகையையும் கொடுத்துவிட்டார் என்றும் நீங்களும் தாணுவும்தான் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தராமல் இருக்கிறீர்கள் என்று சிங்காரவேலன் சொல்கிறாரே? அவர் சொல்வது அனைத்துமே பொய்கள். எங்களுக்கு வந்தது ஆறு கோடிதான் அதைக் கொடுத்துவிட்டோம். நீங்கள் வேண்டுமானால் ராக்லைன் வெங்கடேஷிடமே கேட்டுக் கொள்ளலாம்.
வேந்தர் மூவிஸூக்கு ரஜினி ஒருபடம் நடித்துத் தருவார் என்று நீங்கள் வாய்மொழி உத்தரவாதம் கொடுத்ததாகச் சொல்லுகிறார்களே? ரஜினி சாரும் அப்படிச் சொல்லவில்லை, நானும் அப்படி ஒரு வாக்குறுதி அவர்களிடம் கொடுக்கவில்லை, மொத்தமாகப் பொய் சொல்லுகிறார்கள். ரஜினி சார் என்றைக்குமே இப்படி வாக்குறுதிகள் தந்ததில்லை.
வெறும் பப்ளிசிட்டிக்காக திரும்பத் திரும்ப இப்படி பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் சிங்கார வேலன். வந்த வரை லாரம் என்று அவருடன் இருக்கும் சிலரும் அமைதியாக அவருக்கு உடன்படுகிறார்கள். மீடியாக்கள் இதற்கு முக்கியத்துவம் தருவதுதான் வருத்தமாக உள்ளது. '
உலகில் எந்த நாட்டு சினிமாவிலும் படத்தின் நஷ்டத்தை அதில் நடித்த ஹீரோ ஈடுகட்டியதாக கட்டுக் கதைகள் கூடக் கிடையாது. ஆனால் பாபா படத்துக்காக முதன் முதலில் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் நஷ்ட ஈடு கொடுத்தவர் ரஜினி. இத்தனைக்கும் அப்போது யாருமே அவரிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை.
அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதி காத்தார்கள். ஆனால் நஷ்டம் என்ற முணுமுணுப்பு காதில் விழுந்ததால் அந்த நஷ்ட ஈட்டை முன்வைந்து கொடுத்தார் ரஜினி. அப்படிப்பட்டவருக்கா இந்த நிலமை...?

No comments:

Post a Comment