Saturday, 30 May 2015

14வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில் இன்று துவங்கியது!!


உலகத் தமிழ் தொழ்ல்நுட்ப மன்றம் (உத்தமம்), சார்பில் சிங்கப்பூரில் 14வது உலக தமிழ் இணைய மாநாடு இன்று துவங்கியது. மே 30,31, ஜூலை 1 ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த மாநாடு நடக்க உள்ளது.
இந்த வருடம் சிங்கப்பூரில் நடந்து வரும் 14வது உலக தமிழ் இணைய மாநாட்டினை உத்தமம் நிறுவனமும், சிங்கபூரின் சிம் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகின்றன. கான வினோதன் இசைக் குழுவினரின் இன்னிசையுடன், கண்ணுக்கு விருந்தான பரதநாட்டியத்துடன் விழாதொடங்கியது. ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மணியம் தொடக்க உரை ஆற்றினார்.
சிம் பல்கலைக் கழக பேராசிரியர் ட்சுஇ காய் சாங் வரவேற்புரை ஆற்றினார்.உத்தமம் அமைப்பின் வாசு ரங்கநாதன் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மருமகள் சிங்கை வந்திருக்கிறாள் என இம்மாநாட்டைக் குறிப்பிட்டு உரை ஆற்றினார். இணைய இதழ்களில் பதிப்புகள் தந்து சிறப்பித்தற்காக, அனந்த கிருஷ்ணன், பொன்னவைக்கோ, கல்யாண சுந்தரம், வாசு ரங்கநாதன், லீசா அமைப்பின் ராஜ்குமார் சந்திரா, மணியம் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப் பட்டன.
இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் தொடங்கிவைத்தார். இந்தியா, இலங்கை, அமெரிக்க, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என உலகெங்கும் இருந்து வந்த நூற்றுக் கணக்கான தமிழர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் சிங்கப்பூர் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் பேசியதாவது:
”உலகளாவிய நிலையில் வளர்ந்து வரும் தமிழ் மொழிக்கு சிங்கப்பூர் அரசு சிறப்பான இடம் அளித்து வருகிறது. அதிகாரத்துவ மொழிகளுள் ஒன்றாக தமிழ் மொழி விளங்குகிறது. தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழைக் கட்டிக் காப்பதும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுவதும் தலையாய கடமை.
இன்று தகவல்களுக்குப் பஞ்சமில்லை. இவைகளைப் பெற்று , உணர்ந்து கவனம் செலுத்தி இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல இணையம் பயன்படுகிறது இன்றைய இளைஞர்கள் இணையத்தை வெகுவாகப் பயன் படுத்துகின்றனர். எதிர்நோக்கும் சவால்களை இளைஞர்கள் சமாளிக்க, உயரிய தமிழ் பண்பாட்டினை - தமிழ் ஆர்வத்தினை வளர்த்திட - பயன்பாட்டிற்கு உதவிட இம்மாநாடு பயன்படும்.
பாலர் பள்ளி மானவர்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு - பொது மக்களும் பயன்பட கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது. இன்றைய நவீன சமூக ஊடகங்களான ட்விட்டர் , முகநூல் போன்றவற்றிலும் மொழி பற்றியும் ஈடுபாட்டையும் ஏற்படுத்த இம்மாநாடு உதவ வேண்டும். காலத்திற்கேற்ற கருப் பொருளை இம்மாநாடு தேர்ந்தெடுத்திருக்கிறது .சிம் பல்கலை கழகமும் இணைந்திருப்பது பாராட்டுக்குரியது."

No comments:

Post a Comment