கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளிவந்த படம் ’லிங்கா’. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தால் நாங்கள் பெருத்த நஷ்டம் அடைந்து விட்டோம் என்று ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் நடத்தி வந்தனர் விநியோகஸ்தர்கள்.
மேலும் லிங்கா படத்தினால் பெரிய அளவிற்கு நஷ்டம்ஏற்பட்டுள்ளதாகவும் இப்பிரச்னையில் ரஜினிகாந்த் தலையிட்டு தயாரிப்பாளரிடம் நஷ்டத் தொகையை பெற்றுத் தரவேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தொடர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பிறகு இப்பிரச்சினையை ரஜினிகாந்த் முடித்து வைத்துள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. அதன் பிறகு சிறிது காலம் இப்பிரச்சினை ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட லிங்கா படம், விநியோகஸ்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தொடர்ச்சியாக போராட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என விநியோகஸ்தர்கள் இறங்கினர்.
இதனைத் தொடர்ந்து மொத்த நஷ்டமான 33 கோடிக்கு தயாரிப்பாளர் சங்கம், ரஜினி தரப்பில் திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டார்கள். அப்பேச்சுவார்த்தையில் இறுதியில் 12.5 கோடி ரஜினிகாந்த் தரப்பில் தாணு மற்றும் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கொடுத்ததாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்தார்.
அப்பணத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் பிரித்துக் கொடுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். ஆனால், 'லிங்கா' பிரச்சினையில் முன்னின்று செயல்பட்ட சிங்காரவேலன் மற்றும் சில விநியோகஸ்தர்களுக்கு மட்டும் 5.9 கோடியை பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை இன்னும் கொடுக்கவில்லை. இதற்கான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இன்னும் எட்டப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, "திருச்சி ஏரியா -1.39 கோடி, நெல்லை ஏரியா - 80 லட்சம், செங்கல்பட்டு - 2.30 கோடி, மதுரை ஏரியா - 1.40 கோடி என மொத்தம் 5 கோடியே 89 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டது. எஞ்சிய தொகை 6 கோடியே 61 லட்சம் இன்றுவரை கொடுக்கப்படவில்லை. பணத்தை தாணுவிடம் கேட்டால், ''திருப்பூர் சுப்பிரமணியனிடம் இருக்கிறது'' என்கிறார்.
ஒரு கட்டத்தில், ''பணமெல்லாம் இல்லை'' என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம். சங்கம் தலையிட்டு பேசி முடிக்கப்பட்ட இவ்விஷயத்தில் நாங்கள் நம்பவைத்து ஏமாற்றப்பட்டதாக கருதுகிறோம். ரஜினியின் தூதராக செயல்பட்ட திருப்பூர் சுப்பிரமணியம் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். உண்மையிலேயே திருப்பூர் சுப்பிரமணியம் ரஜினியின் தூதுவர்தானா? இனியும் பொறுமை காக்கும் நிலையில் இல்லை.
ரஜினி சார்பில் கொடுக்கப்பட்ட 12.50 கோடி முழுமையாக சம்பந்தப்பட்ட 'லிங்கா ' பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் இடைத்தரகர் தலையீடு இன்றி உடனடியாக வழங்கப்பட வேண்டும். 'லிங்கா' பட வெளியீட்டின்போது விநியோகஸ்தர்கள் பாக்கி தொகைக்கு ஈடாக கொடுத்த காசோலை சம்பந்தமாக வேந்தர் மூவீஸ் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. 12.50 கோடிக்கு ஒப்புக்கொண்டபோது விநியோகஸ்தர்கள் மீது வேந்தர் மூவீஸ், தியேட்டர்காரர்கள் எப்பிரச்சினையும் கிளப்பமாட்டார்கள் என கொடுக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டுள்ளது.
MG (மினிமம் கியாரண்டி) அடிப்படையில் திரையிட்ட தியேட்டர்காரர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கு கொடுத்த வாக்குறுதிப்படி கால்ஷீட் தரவேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே MG அடிப்படையில் படம் திரையிட்டவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இழப்பீடு கிடைக்கும்.
எனவே, அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆலோசித்து முடிவெடுக்க 'லிங்கா' படத்தை MG அடிப்படையில் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் கூட்டுக் கூட்டம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக முடிவெடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ரஜினி கால்ஷீட் தரவில்லை என்றால் 15 கோடி பணம் தர வேண்டும்:
'லிங்கா' விவகாரம் தொடர்பாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் பேசிய போது, "இப்பிரச்சினையில் ரஜினிதலையீட்டு உடனே இழப்பீடு தொகையை பெற்றுத் தரவேண்டும். திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து எங்களுக்கு நெருக்கடி முற்றுகிறது. இல்லையென்றால் வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு குறுகிய கால தயாரிப்பாக ரஜினி ஒரு படம் பண்ண வேண்டும். அவ்வாறு பண்ணவில்லை என்றால் இன்னும் 15 கோடி பணம் கொடுத்து இப்பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றார்.
சிங்காரவேலன் விளம்பரம் தேடுகிறார்: தயாரிப்பாளர் தாணு ஆவேசம்
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவிடம் பேசிய போது, "உங்களிடம் புகைப்பட ஆதாரம் கொடுத்துவிட்டேன். அப்படத்தில் பணம் வாங்கிவிட்டு அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்த பத்திரத்துடன் இருக்கிறார். பணம் வாங்கிவிட்டு இன்னும் ஏன் இவ்வளவு கொதிப்படைகிறார். ஏனென்றால் விளம்பரப் ப்ரியராக இருக்கிறார். அது தான் உண்மை. பணம் பெறதாவர்கள் அந்த ஏரியாவின் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து வந்தால் கண்டிப்பாக பணம் கொடுக்க இருக்கிறோம்.
அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. தனித்தனியாக வந்து எங்களுக்கு பணம் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். விநியோகத்தில் அனுபவம் இல்லாதவர்களால் தமிழ் சினிமா சீரழிந்து வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்டுவோம்" என்று தெரிவித்தார்.
ரஜினியை விடாமல் துறத்துவது நியாயமா..?
ஒரு படம் வெளியாகி பெரும் லாபம் குவிக்கும்போது, அதை முழுவதுமாக அனுபவிப்பவர்கள் அதைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையிட்ட தியேட்டர்காரர்கள்தான். அட, இடையில் வரும் மீடியேட்டர்களுக்குக் கூட நல்ல லாபம். அப்போதெல்லாம் அந்த வெற்றிக்குக் காரணமான படத்தின் நாயகனுக்கோ அல்லது இயக்குநருக்கோ லாபத்தில் யாரும் பங்கு தருவதில்லை.
கேட்டால் 'இது யாவாரம்.. லாப நட்டம் சகஜம்' எனத் தத்துவம் பேசுவார்கள். ஆனால் அதே படம், குறிப்பாகரஜினி படம் சரியாகப் போகவில்லை என்றால், உடனே நஷ்டத்தை திருப்பிக் கொடுங்கள் என ரஜினியை நெருக்குகிறார்கள். இப்போது, அந்த 'வியாபார எத்திக்ஸ்' எங்கே போனதென்று தெரியவில்லை. ஏன் ரஜினியை மட்டும் இவர்கள் குறி வைக்கிறார்கள் என்றும் தெரியவில்லை..?
No comments:
Post a Comment