இலங்கையில், ஆட்சி மாறினாலும், தமிழர்களின் நிலை மாறவில்லை என்று கூறியுள்ளார் தி.மு.க., தலைவர் கருணாநிதி.
தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் இலங்கை தமிழர்களின் நிலங்களை திரும்பத் தராதது, தமிழர் பகுதியில் இருந்து இராணுவத்தை வெளியேற்றாதது, 13வது சட்ட திருத்தத்தை மாற்ற நினைப்பது போன்ற முக்கிய நிகழ்வுகளை முன்வைத்து இலங்கையில் ஆட்சி செய்து வரும் சிறிசேன அரசை சாடியுள்ளார் கருணாநிதி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்ற மைத்திரி பால சிறீசேனா டெல்லிக்கு வந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்கவிருந்த வேளையில், நான் இந்தியப் பிரதமருக்கு 13-2-2015 அன்று விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன்.
அந்தக் கடிதத்தில், "இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே திரு. மைத்திரி பால சிறீசேனா, 2015 ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில், இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தாங்கள் நீண்ட நெடுங்காலமாக அனுபவித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகுபாடு மற்றும் மனிதநேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே இலங்கைத் தமிழர்கள் சிறீசேனா அவர்களுக்கு விரும்பி வாக்களித்தார்கள்.
தேர்தலின் போது சிறீசேனா அவர்களும், அவருடைய கூட்டணிக் கட்சியினரும் அளித்த வாக்குறுதிகளைத் தமிழர்கள் உண்மையிலேயே நம்பினார்கள். தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்றும் தமிழர்கள் பேராவலுடன் எதிர்பார்த்தார்கள்" என்று விளக்கியிருந்தேன்.
மேலும் என்னுடைய அதே கடிதத்தில், "தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தமிழர்களைச் சோர்வடையச் செய்திருக்கின்றன. தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், செய்யப்பட்ட அறிவிப்புகளும் பல...ஆனால் இதுவரை நடைமுறைக்கு வந்தது ஒரு சிலவே; அல்லது எதுவும் நடைமுறைக்கே வரவில்லை என்று தான் கூற வேண்டும். ஒரு சில நாட்களிலேயே சாதிக்கப்படக் கூடியவை கூட இதுவரையில் நடைபெறவில்லை.
தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவம் திரும்பப் பெறப்படவில்லை" என்றும், "சர்வதேசக் குழு ஒன்றை அமைத்து, இலங்கையில் நடைபெற்ற கொடுமைகள் குறித்து விசாரணை செய்ய இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இலங்கை அரசால் முறியடிக்கப்பட்டுள்ளன. தற்போது இலங்கையின் வடக்கு மாகாண கவுன்சில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்தத் தீர்மானத்தினை இந்திய மத்திய அரசு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் "தீர்மான" வடிவில் எடுத்துச் செல்வது பற்றி ஆராய்ந்து பரிசீலனை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்றும் விரிவாக ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் பற்றியும், இந்திய அரசு ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளில் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
ஆனால், இன்று வெளிவந்திருக்கும் செய்தியைப் பார்க்கும்போது, இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றதற்குப் பிறகும்கூட, ஈழத் தமிழர்களின் வாழ்க்கை நிலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 2014ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆக்லேண்டு என்னும் தனியார் நிறுவனம் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது.
அந்த ஆய்வின் முடிவுகள் "போருக்குப் பிந்தைய நிலையில், நீதிக்குப் போராடும் நிலை" என்ற தலைப்பில் 39 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது என்றும், ஆறு தமிழர்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற வகையில் சுமார் 1.60 இலட்சம் இராணுவ வீரர்கள் அங்கு தங்கியிருக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கவில்லை என்றும், அந்த நிலங்களை இராணுவ நிர்வாகம் வியாபார நோக்கில் பயன்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், தமிழர் பகுதிகளில் போர் நினைவு வெற்றிச் சின்னங்களும், புத்த மடாலயங்களும் அமைக்கப்பட்டு வருவதோடு, தமிழர்களின் கலாச்சாரத்தை அழிப்பதற்குப் பல்வேறு வகைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதிப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படும் 57 வது படைப்பிரிவின் தளபதி ஜகத் டயஸ் என்பவர் இராணுவத் தலைமை அதிகாரியாகத் தற்போது நியமிக்கப்பட்டிருப்பது புதிய அரசின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் ஏற்கனவே இந்தியப் பிரதமருக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் விரிவாகச் சுட்டிக்காட்டியவாறு, உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். இப்போது வெளிவந்துள்ள ஆக்லேண்டு ஆய்வு அறிக்கை இலங்கையில் அதிபர் மாறியும் தமிழர்களுக்கு எதிரான அநீதி குறையவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது. அங்கே ஆட்சி மாறியது.. ஆனால் காட்சி மாறியதா?
No comments:
Post a Comment