Saturday, 30 May 2015

செம்மரக்கடத்தல் விவகாரம்: 4 போலீஸார் கைது!! டி.எஸ்.பி. தலைமறைவு!!


செம்மரக்கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக ஆம்பூரில் 4 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில், முன்னாள் பா.ம.க., செயலாளரான சின்னப்பையன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 27ஆம் தேதி வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பாமக ஒன்றிய முன்னாள் செயலாளரான சின்னப்பையன், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தனிப்படை நடத்திய விசாரணையில், வேலூர் - அலமேலுரங்காபுரத்தைச் சேர்ந்த ஜோதிலட்சுமிக்கு என்பவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்த ஜோதிலட்சுமியின் வீட்டிற்கு தனிப்படை போலீஸார் சென்றுள்ளனர்.


அப்போது ஜோதிலட்சுமியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏழரை டன் செம்மரக்கட்டைகள் மற்றும் 3 கார்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். செம்மரக்கடத்தல் தொடர்பில் ஜோதிலட்சுமியும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர். ஜோதிலட்சுமி மற்றும் அவரது கணவரிடம் நடத்திய விசாரணையில், ஆம்பூர் கலால் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேல் உள்ளிட்ட 5 போலீசாருக்கும் செம்மரக்கடத்தலில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த தகவல் கிடைத்ததுமே, ஆம்பூர் கலால் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு தலைமறைவானார். தலைமைக் காவலர்கள் சவுந்தர், சாமுவேல் மற்றும் ஓட்டுனர்கள் ராஜேஷ், சீனிவாசன் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான தங்கவெலுவை போலீஸார் தேடி வருகின்றனர்.
அதே வேளை பா.ம.க., பிரமுகர் சின்னப்பையனின் கொலைக்கும் செம்மரக்கடத்தல் கும்பலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment