Tuesday, 26 May 2015

இன்றைய தினம்..!!(மே 27)


மே 27
ஜவஹர்லால் நேரு இறந்த தினம்!!!
ஜவஹர்லால் நேரு, 14 நவம்பர் 1889 ஆம் ஆண்டு அலகாபாத்தில் மோதிலால் நேரு, சொரூப ராணி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். நேரு தனது இளம் வயதில், தந்தையின் பேனாக்கள் இரண்டு ஒரே மாதிரியே இருந்தபடியால் ஒன்றை தான் எடுத்துக் கொண்டார். பேனாவைக் காணவில்லை என்று தேடிய மோதிலால் நேரு, உண்மை தெரிந்து நேருவின் முதுகு பழுக்கிற அளவுக்குக் கவனித்தார்.
‘நேர்மையாக வராத எந்தப் பொருளையும் நமக்கானது ஆக்கிக்கொள்ளக் கூடாது!' என்கிற பாடத்தை வாழ்நாள் முழுக்க அந்தச் சம்பவத்தால் கடைபிடித்தேன்’ என்பது நேருவின் பதிவு. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நேரு, தன்னுடைய 13 ஆம் வயதில் அன்னிபெசன்ட் அம்மையாரின் ’பிரம்ம ஞான சபை’ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
1912 ஆம் ஆண்டு லண்டனில் வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்று பிரிட்டனில் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றபோதே நேருவிற்கு இந்திய அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தில் காந்தி யின் தலைமையின் கீழ் செயல்பட்டார். 1913 ஆம் ஆண்டு காந்தியடிகளின் பொது உரிமை போராட்டத்திற்கு நிதி வசூலித்துக் கொடுத்தார்.
1916 ஆம் ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் நேரு முதன் முறையாகக் காந்தியைச் சந்தித்தார். இது காந்தி-நேரு இருவருக்குமான இணை பிரியா தோழமையின் தொடக்கமாக அமைந்தது. 1917-ம் ஆண்டு அன்னி பெசன்ட் துவங்கிய தன்னாட்சி இயக்கத்தின் செயலாளர் ஆனார். ‘தி இன்டிபென்டன்ட்’ இதழை தன்னுடைய தந்தை ,மோதிலால் நேருவுடன் இணைந்து 1919-ல் ஆரம்பித்தார். நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிக்கையை 1938-ம் ஆண்டு நேரு துவங்கி நடத்தினார். 379 அப்பாவி மக்களைக் கொன்று குவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையே நேருவை இந்திய விடுதலைப் போராட்டத்துக்குள் இழுத்தது.
இந்தியாவில் முதல் தேர்தல் 1951ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி, 1952 மே வரை நடைபெற்றது. முதல் இந்தியத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஜவஹர்லால் நேரு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றார். மிக அதிக காலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் என்கிற சாதனைக்குரியவர் நேரு.
அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு வரப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங் கள், கலப்பு பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கையில் பஞ்சசீலக் கொள்கை, அணிசேராக் கொள்கை, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இடப்பட்ட அடித்தளம், பாகிஸ்தான் சீனப் போர் நெருக்கடிகள், மாநிலங்களின் ஒற்றுமை மற்றும் நலன் கருதி கொண்டுவரப் பட்ட மாநில மறுசீரமைப்பு மற்றும் அலுவல் மொழி ஆணையம் ஆகியவை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளாகும்.
‘கே ப்ளான்’ இந்திராவை நேருவுக்குப் பின் பதவிக்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட திட்டம் என்பது ஷ்யாம் பிரசாத் முகர்ஜி,லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் கருத்தாகும் 1947 இல் வடமேற்கு மாகாணங்களில் ஒரு முறையும்,மஹாராஷ்ட்ராவில் 1951,1956,1961 ஆகிய மூன்று வருடங்களிலும் நேரு மீது கொலை முயற்சி நடை பெற்றுள்ளது.
நேருவுக்கு மக்களோடு கலந்து விடுவதில் எல்லையற்ற விருப்பம் கொண்டிருந்தார். அடிக்கடி பாதுகாப்பை மீறி மக்களுக்கு நடுவே புகுந்து விடுவார். அவர் செல்கிற பொழுது ட்ராபிக்-ஐ நிறுத்துகிற வழக்கம் கிடையவே கிடையாது.
1964, ஜனவரி 10-ம் நாள் புவனேஸ்வரத்தில் (ஒடிசா) அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட நேருவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மே 27-ம் நாள் பிற்பகல் இரண்டு மணிக்கு காலமானார். நேரு மறைவிற்கு பின் குல்சாரி லால் நந்தா தற்காலிகப் பிரதமராக பதவியேற்றார்.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1883 - ரஷ்யாவின் மன்னனாக மூன்றாம் அலெக்சாண்டர் முடி சூடினான்.
1937 - கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.
1997 - முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
சிறப்பு தினம்:
பொலீவியா அன்னையர் தினம்.
நைஜீரியா சிறுவர் தினம்.

No comments:

Post a Comment