நடந்து முடிந்த 68-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல பிரெஞ்ச் இயக்குநர் ஷாக் அவ்தியா எழுதி இயக்கிய "தீபன்" திரைப்படம், சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் விருதை பெற்றிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டுக்கு அகதிகளாக குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழ ஆயுதப் போராளியுமான ஷோபாசக்தி கதாநாயகனாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் சந்திக்கும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளையும், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் அலைச்சலையும் , மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் "தீபன்" என்று பரவலாக பேசப்படுகிறது.
கேன்ஸில் இந்ததிரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரியின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சர்வதேச திரைப்பட போட்டியில் ஹாலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் பல போட்டியில் இருந்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, முற்றிலும் புதுமுகங்களும், தொழில்முறை திரைப்பட முன் அனுபவமற்ற நடிகர்களும் நடித்த தீபன் திரைப்படம் இந்த சிறப்பு விருதினை வென்றிருப்பது ஐரோப்பிய திரை விமர்சகர்கள் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
No comments:
Post a Comment