Sunday, 24 May 2015

"ஜெயலலிதாவின் சர்வாதிகார ஆட்சியை ஒழிப்போம்.." சவுண்டு விட்ட ஸ்டாலின்..!!


திராவிட முன்னேற்றக் கட்சியின் மதுரை தென் மண்டல பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
மதுரை ஒத்தக்கடையில் நடந்த இந்த கூட்டத்திற்கு திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில், பெரியப் பெரிய எல்.இ.டி., திரைகளுடன் மைதானம் அமைக்கப்பட்டு முன்பு இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமான புதுமையான வடிவமைப்பில் மாநாடு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். இந்த உரையில், அ.தி.மு.க.,வின் நான்காண்டு ஆட்சி குறித்து விமர்சித்தார், மேலும், ஜெயலலிதாவின் ஆட்சியை சர்வாதிகார ஆட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க., ஸ்டாலின், இந்த மதுரைக் கூட்டம் மேபெரும் வெற்றி என்றும், அ.தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராக உள்ளனர் என்பதை மதுரை கூட்டம் நிரூபித்துள்ளது என்றும், இதே போன்று தமிழகத்தின் பிற பகுதிகளிலும் எழுச்சி கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
ஸ்டாலின் ஆற்றிய சிறப்புரை பின்வருமாறு:
இந்த ஆட்சியின் மீது நமக்கு கோபம் வந்தாக வேண்டும். உங்களை பார்த்து கோபம் வருகிறதா வரவில்லையா கேட்கிறேன் கோபம் வந்தாக வேண்டும். கோபப்படுவது குற்றமல்ல. அநீதிக்கு எதிராய் நாம் கோபப்படாமல் இருந்தால்தான் குற்றம். அதனால் நீங்கள் கோபப்பட வேண்டும். நீதியின்மை, ஆக்கப்பூர்வமான செயலின்மை ஆகியவற்றை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் சாதிப்பது குற்றவாளிகளுக்கு துணைபோனதாகிவிடும்.
ஆகவே நீங்கள் நிச்சயமாக உறுதியா கோபப்பட வேண்டும். இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கிய இந்த தமிழ்நாட்டை, முதல் மாநிலமாக விளங்கிய இந்த தமிழ்நாட்டை கடைசி இடத்திற்கு கொண்டு வந்த தள்ளியிருக்கிறார்களே அதற்காக நீங்கள் கோபப்பட வேண்டும். மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சி நடத்துகிறார்களே கோபப்பட வேண்டாமா?
விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கி நிலம் கையகப்படுத்தக் கூடிய மத்திய அரசினுடைய மசோதாவிற்கு ஜெயலலிதா அரசு மத்தளம் வாசித்துக்கொண்டிருக்கிறதே நாம் அவர்கள் மீது கோபப்பட வேண்டுமா வேண்டாமா? ஒரு பெண் ஆட்சிப்புரியக் கூடிய இந்த தமிழ்நாட்டில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தாராளமாக நடந்து கொண்டிருக்கிறதே அதற்காக நாம் கோபப்பட வேண்டுமா வேண்டாமா?
உங்கள் அன்னையர்களுக்கு, சகோதரிகளுக்கு பாதுகாப்பு இல்லையே. கோபப்பட வேண்டுமா வேண்டாமா. பொதுமக்கள் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் உண்டா. அதற்காக கோபப்படுங்கள்! இதற்கு முடிவு கட்ட தமிழ்நாட்டை நாம் காப்பாற்றியாக வேண்டும். சர்வாதிகாரம் தாண்டவமாடுகிற இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விழித்தெழுந்து உங்கள் கடமையை நிறைவேற்ற முன்வாருங்கள்.
நல்ல மாற்றத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வாருங்கள். அதிமுகவினுடைய 4 ஆண்டுகால அக்கிரம ஆட்சியை பார்த்து நாம் கேள்வி கேட்கிறோம். அநியாய ஆட்சியை பார்த்து கேள்வி கேட்கிறோம். சர்வாதிகார ஆட்சியைப் பார்த்து கேள்வி கேட்கிறோம். செயலற்றுப் போன ஆட்சியைப் பார்த்து கேள்வி கேட்கிறோம். மதுரையில் மோனோ ரயில் திட்டத்தை கொண்டு வருவோம் என்று சொன்னார்களே.
ஏதாவது பணிகள் தொடங்கியிருக்கிறதா?. மோனோ ரயில் திட்டம் மதுரையில் தொடங்கக் கூடிய அறிகுறி தெரிகிறதா? இன்றைக்கு தமிழத்தில் உள்ள நிதிநிலை எப்படி இருக்கு தெரியுமா? ரூ. 2 லட்சம் கோடி கடன். நான் சொல்லவில்லை. முதல் அமைச்சர் பதவியில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு இறங்கினாரே, இப்போது நிதி அமைச்சராக மாறியிருக்கிறாரே ஓ.பி. அவர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
கடைசியாக நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஆகவேதான் நான் இங்கு இருக்கக் கூடியவர்களை பார்த்து கேட்டுக்கொள்வது விரையில் ஒரு நியாயமாக ஒரு தீர்ப்பை வழங்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். பட்டதுபோதும், கெட்டதுபோதும் விழித்தெழுவோம், சூளுரைப்போம்.
ஜெயலலிதா அள்ளித்தெளித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தார்களே நாடு என்ன பலனை கண்டது? கடந்த 4 ஆண்டுகளில் வாக்குறுதிகளில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா. சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் ஏதாவது செயல்படுத்தப்படுகிறதா. மின் பற்றாக்குறையை போக்குவதற்கு ஏதாவது தீர்வு கண்டிருக்கிறார்களா. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்களா?
இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களை வகுத்திருக்கிறார்களா? இந்த ஆட்சியின் மீதான அச்சத்தின் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் அலறி அடித்துக்கொண்டு தமிழகத்தைவிட்டு ஓடுகிறது. அதிகாரிகள் உலகத்தைவிட்டே ஓடுகிறார்கள். இதுதான் இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட தமிழ்நாட்டை நாம் காப்பாற்றியாக வேண்டும்.
இந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள், சத்துணவு ஊழியர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், அறநிலையத்துறையில் உள்ள ஊழியர்கள் போராடினார்கள். மக்கள் நலப் பணியாளர்கள் போராடி பார்த்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வரமுடியாத நிலையில் உள்ளனர். அரசியலில் இருக்கக் கூடிய நாம் ஒரு பக்கம் போராடிக்கொண்டிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல இப்போது பத்திரிக்கையில் வரும் செய்தி, மக்களே வீதிக்கு வந்து குடிநீருக்காக சாலை மறியல் செய்யக் கூடிய கொடுமையும் இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி தமிழக அரசு கவலைப்படுகிறதா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியை நீதிமன்றம் கண்டிக்கிறது. உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது. உச்சநீதிமன்றம் கண்டிக்கிறது.
கொலைகள் ஏன் தடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது. நாங்கள் சொன்னபடி விசாரணை அதிகாரியாக சகாயம் ஐஏஎஸ் அவர்களை ஏன் நியமிக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கண்டித்து அதற்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் போடவில்லையா? மாற்றுத்திறனாளிகள் பற்றி தலைமை செயலகத்தில் இருக்கக்கூடிய அரசினுடைய செயலர் சொன்ன கூற்று தவறு என்று சொல்லி நீதிமன்றம் கண்டித்தது.
எனவே அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் ஒரு மோசமான ஆட்சி என்பதற்கு நீதிமன்றம் சொன்னதைவிட வேறு யார் சொல்லப்போகிறார்கள்? 4 ஆண்டு முடிந்து அதிமுக ஆட்சி 5வது ஆண்டு தொடங்குகிறது. எனக்கு ஒரு ஆச்சரியம். என்ன ஆச்சரியம் என்று கேட்டீர்கள் என்றால், எப்பவுமே ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு வரும்போது, இரண்டாம் ஆண்டு முடிந்து மூன்றாம் ஆண்டு வரும்போது பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுபபார்கள்.
ஆனால் இந்த முறை ஒரு விளம்பரம் இல்லை. சாதனைகளை சொல்லி விளம்பரம் உண்டா. இல்லை. சாதனை படைச்சோம். சரித்திரம் படைச்சோம் என்று ஒவ்வொரு ஆண்டும் விளம்பரம் கொடுத்தீங்களே. ஆனால் இப்போ ஏன் விளம்பரம் இல்லை? ஏனென்றால் எதையும் செய்யவில்லை. அப்படி விளம்பரம் கொடுத்தால் மக்களெல்லாம் கைகொட்டி சிரிப்பார்கள் என்று அவர்கள் உணர்ந்த காரணத்தினால் விளம்பரங்கள் கொடுக்கவில்லை.
தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று சட்டமன்றத்திலே ஜெயலலிதா சொன்னது நிறைவேற்றப்பட்டதா. வீடு கட்ட ஒரு லட்சம் ரூபாய் மானியம். ஒரு சென்ட் நிலம் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்களே. யாருக்காவது ஒருவருக்காவது அது வழங்கப்பட்டிருக்கிறதா? வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கிற வீடுகளுக்கெல்லாம் 20 லிட்டர் குடிநீர் இலவசமாக தருவதாக கூறினார்கள்.
யாருக்காவது 20 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறதா? 10 ரூபாய்க்கு அம்மா குடிநீர். தண்ணீர் என்றால் சும்மா கொடுக்க வேண்டும். அதற்கு அம்மா என பெயர் வைத்து 10 ரூபாய். இந்தியாவில் எந்த மாநிலத்திலேயும் குடிநீரை விற்கக் கூடிய அரசாங்கம் கிடையாது. உலகத்திலேயும் எந்த நாட்டிலேயும் கிடையாது. தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்கிறது.
அது வேறு. மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை தரவேண்டிய அரசாங்கம் அந்த குடிநீரை 10 ரூபாய்க்கு விற்கக் கூடிய வெட்கம் வேதனை இந்த ஆட்சியில் மட்டும்தான் என்பதை தமிழகம் பார்க்கிறது.

No comments:

Post a Comment