Monday, 25 May 2015

”ஜெ., வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு செய்தால், மோதல் வெடிக்கும்” ரோஜா…


கடந்த மே 11ம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா, நேற்றைய முந்தினம் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
அதே சமயம், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகையும், ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாமல் இருந்தால் அனைவருக்கும் சந்தோஷம் என்று தெரிவித்துள்ளார்.
நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள ரோஜா, தம் தொகுதியில் உள்ள ரயில்வே மேம்பாட்டு பணி விஷயமாக இன்று சென்னை வந்தார். சென்னை செண்ட்ரலில் உள்ள தென்னக ரயில்வே அலுவலகத்தில் தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அனுபவம் சர்மா, முதன்மை இயக்க அதிகாரி அனந்தராமன் ஆகியோரை நேரில் சந்தித்து நகரி தொகுதி மேம்பாடு தொடர்பான மனுவை அளித்தார்.
இந்த மனுவில், மும்பை செல்லும் தாதர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நகரியில் நின்று செல்ல வேண்டும் என்றும், சென்னை-திருத்தணி இடையே இயக்கப்பட இருக்கும் புதிய மின்சார ரயில் சேவையை புத்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும், நகரி ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள், நடைபாதைகள், ரயில்வே மேம்பாலங்கள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ரோஜா, சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதா 5வது முறையாக பதவியேற்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்டது பழிதீர்ப்பிற்கான ஒரு வழக்கு என்றும், எனவே, இது தொடர்பில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்றும் கூறினார்.
மேலும், மேல்முறையீடு செய்யப்படும் பட்சத்தில் அது, கர்நாடக, தமிழ் மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் எனவும், மேல்முறையீடு செய்யாமல் இருப்பதே அனைவருக்கும் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment