கௌதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் என்னைஅறிந்தால் படம் முதலில் பொங்கல்நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அப்புறம் ஜனவரி 29 க்குத் தள்ளிப்போனது, அந்தத் தேதியிலும் முடியாது என்பதை உணர்ந்து இப்போது பிப்ரவரி 5 என்று சொல்லியிருக்கிறார்கள்.
பெரியநடிகர் பெரியஇயக்குநர், முன்னணிதயாரிப்பு நிறுவனம் ஆகியன இணைந்திருந்தும் ஏன் இவ்வளவு சிக்கல்கள்? என்கிற கேள்விகள் எல்லோருக்கும் இருக்கிறது. அந்தக்கேள்விகளோடு இயக்குநர்கௌதம்மேனனைச் சந்தித்தோம்.
• இந்தப்படத்தின் கதை பற்றி..?
இது ஒருதனிநபரின் வாழ்க்கைப்பயணம் என்று சொல்லலாம். 13 வயதிலிருந்து சுமார் நாற்பத்தைந்து வயதுவரையிலான ஒருவரது வாழ்க்கையை இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம். நம்முடைய இந்தப்பருவத்தில் எவற்றையெல்லாம் நாம் கடந்து வந்திருப்போமோ அவற்றோடு திரைப்படத்துக்கான ஒருசில விசயங்களும் சேர்ந்ததுதான் படம்.
• இந்தப்படத்தில் அஜித் என்னவாக வருகிறார்.?
இந்தப்படத்தில் அவரை அவராகவே காட்டியிருக்கிறோம். படப்பிடிப்பின்போது, இப்போது என்ன செய்யவேண்டும்? என்று அவர் கேட்கும்போது, இதுபோன்ற ஒரு காட்சி உங்கள் அன்றாடவாழ்வில் வரும்போது நீங்கள் எப்படி நடப்பீர்களோ அப்படியே இருங்கள் என்று சொல்வேன். அவரும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
• படத்தில் அவர் கல்லூரிமாணவரா? காவல்அதிகாரியா? குடும்பத்தலைவரா? இப்படி என்னவாக வருகிறார்?
அதை இப்போது சொன்னால் கதையைப் பற்றி முழுமையாகச் சொல்கிற மாதிரி ஆகிவிடும். அப்படிச் சொல்வது படத்துக்கான எதிர்பார்ப்பைக் குறைத்துவிடலாம். எனவே சிலநாட்கள் காத்திருங்கள்.
• அஜித் பல்வேறு தோற்றங்களில் வருவாரா ?
நம் எல்லோருடைய தோற்றமும் இருபது வயதில் இருப்பது போல முப்பது வயதில் இருக்காது, நாற்பதுவயதில் வேறுமாதிரி இருக்கும். அதுபோலத்தான் வயதுக்கேற்ற தோற்றங்களில் அவர் வருகிறார். எல்லாமே சிறப்பாக வந்திருக்கின்றன.
• 13 வயதுத் தோற்றத்திலும் அவரே நடித்திருக்கிறாரா.?
அம்மாதிரி தப்பையெல்லாம் நான் செய்யமாட்டேன். இருபதுவயது முதலாக அவர் நடித்திருக்கிறார்.
• பஞ்ச் வசனங்கள் இருக்கின்றனவா.?
அஜித் நடிக்கிறார் என்பதால் நிறைய பஞ்ச் வசனங்களை வைத்திருந்தோம். படப்பிடிப்பின்போது அதைப் பார்த்துவிட்டு, இந்த வேடத்தில் நான் நடிக்கவில்லையென்றால் இந்தஇடத்தில், இந்த வசனத்தை வைப்பீர்களா? என்று கேட்பார். மாட்டேன் என்று நான் சொன்னால், அப்படியானால் வேண்டாம் என்று சொல்லிவிடுவார். இந்தப்படத்தில் உங்களுடைய அடையாளம் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் எனச் சொல்லிவிட்டார்.
• ஏதேனும் ஓரிரண்டு வசனங்களைச் சொல்லலாமா.?
அவர் நிறைய வசனங்களை வேண்டாமென்று சொல்லிவிட்டதால் படத்தில் பஞ்ச்வசனங்கள் குறைவாகவே இருக்கின்றன. அவற்றையும் முன்னாலேயே சொல்லிவிட்டால் எப்படி?
• படத்தில் த்ரிஷா, அனுஷ்கா என இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள், இரண்டுபேர் இருந்தாலே சிக்கல்கள் வருமே?
இந்தப்படத்தின் கதையை அனுஷ்காவிடம் சொலும்போதே த்ரிஷாவின் பாத்திரம் உட்பட முழுக்கதையையும் தான் சொன்னேன். அதேபோல த்ரிஷாவுக்கும் சொன்னேன். அனுஷ்காவின் பாத்திரம் சிறப்பாக இருக்கிறது என்று த்ரிஷா சொன்னார்.
இதை அனுஷ்காவிடம் சொன்னேன். அப்படியானால் த்ரிஷாவே இதைச் செய்யட்டும். அவர் செய்யவிருக்கும் வேடத்தில் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். மறுபடி த்ரிஷாவிடம் இதைச் சொன்னபோது, நான் எனக்குச் சொன்னவேடத்திலேயே நடிக்கிறேன், அது அனுஷ்காவுக்கு நன்றாக இருக்கிறது என்றுதான் சொன்னேன் எனச் சொல்லிவிட்டார். படத்தைப் பார்த்த பிறகும் இருவரும் ஒருவரையருவர் பாராட்டி எஸ்எம்எஸ் செய்திருக்கிறார்கள்.
• படப்பிடிப்பு நடத்திய இடங்கள் பற்றி..,?
இந்தப்படத்துக்காக இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு போய்வந்தோம்.
• வெளியீட்டுத்தேதி சொன்ன பிறகும் தாமதமானது எதனால்.?
படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகச் சில வேலைகள் செய்யவேண்டியிருந்தது. அதனால் பொங்கல்நாளில் படத்தை வெளியிடமுடியாமல் போனது.
• படங்களின் விளம்பரங்களுக்கு மற்ற எல்லாக் கதாநாயகர்களும் வருகிறார்கள். அஜித் மட்டும் வருவதில்லையே.?
இது அஜித்திடம் கேட்கவேண்டிய கேள்வி. ஆனால் அஜித்தின் இந்தப்போக்கு எனக்குப் பிடித்திருக்கிறது.

No comments:
Post a Comment