Wednesday, 28 January 2015

குடியரசு தின விழாவில் ஜெ., படம்: தேசிய அவமானம்..!! ராமதாஸ் காட்டம்!!


தமிழகத்தில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடந்த அணிவகுப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவங்களும், படங்களும் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு, பா.ம.க., நிறுவனம் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பா.ம.க., பொதுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் கோ.க.மணி, எம்எல்ஏ காடுவெட்டி குரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், குடியரசு தினவிழாவில், ஊழல் குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஒருவரது படத்தை இடம்பெறச் செய்வது, இந்த தேசத்தையே அவமானப்படுத்துவதற்கு சமமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த கூட்டத்தில் காவிரிப் பிரச்சனை, தமிழகத்தின் மேம்பாடு, நாட்டு முன்னேற்றம் ஆகியவை குறித்து ராமதாஸ் பேசினார். நாகை கட்சிக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியவை பின்வருமாறு:
காவிரி பிரச்சனையில் அதிமுக, திமுக அரசுகள் தமிழக மக்களுக்கு பட்டியல் போடும் அளவில் துரோகம் இழைத்துவிட்டன. 3 போக விவசாயம் நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் 1 போக விவசாயத்திற்கும் வழியில்லை. கர்நாடக அணைகளில் தண்ணீர் வழிந்தால்தான் தமிழகத்தில் பாசனம் என்ற நிலை உருவாகிவிட்டது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமானால் அரசியல் துணிச்சல் மிக்க அரசு அமையவேண்டும். அந்த அரசு பாமக அரசாகத்தான் இருக்க முடியும்.
தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் போன்றவை கர்நாடகாவை பெரிதாக மதித்தார்களே தவிர தமிழகத்தின் நலனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் தனிநபர் வருவாய் அதிகரிக்கவேண்டும்.
அதிமுக ஆட்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் 65 ஆயிரத்து 244 பேருக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதே காலத்தில் 28 லட்சம் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். 95 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
தமிழகம் கடனில் மூழ்கிக்கொண்டிருக்கின்றது. கடனில் முதலிடம் வளர்ச்சியில் கடைசி இடம் என்பது தமிழகத்தின் தற்போதைய நிலை. 2014-15 ஆண்டில் தமிழகத்தின் ஓட்டுமொத்தக் கடன் 1 லட்சத்து 78 ஆயிரத்து 170 கோடி. மின் வாரியத்திற்க்கான கடன் 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி.
பிற பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் 4 ஆயிரம் கோடி. தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் தலையிலும் ரூ 55,500 கடன் தொகை தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதுதான் ஜெயலலிதா ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது.
2012-13-ம் ஆண்டில் தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி 4.90 சதவிகிதம். தமிழகத்தின் வளர்ச்சி 4.14 சதவிகிதம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் தான் கடைசி இடத்தில் உள்ளது. விவசாயம் மற்றும் தொழில்துறையில் தமிழகம் பின்நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.
எனது தலைமையிலான பாமக கடந்த 34 ஆண்டுகளாக மது ஒழிப்பிற்காக போராடி வருகின்றது. மாணவர்களும் மதுவிற்கு அடிமையாகி, மது அருந்திவிட்டு சீருடையுடன் வீதிகளில் விழுந்து கிடக்கும் அவலமும் அரங்கேறி வருகின்றன. மதுவை ஒழிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற 66-வது குடியரசுதின அணிவகுப்பில் ஊழல் வழக்கில கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படங்களை காட்சியாக வந்தது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதை தேசிய அவமானமாகவே கருத வேண்டும்.
2001 -2006ல் ஜெயலலிதா ஆட்சியின் போது தமிழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்தப் பட்டியல்களை தயார் செய்து வருகிறோம். இந்த பட்டியலை தமிழக ஆளுநரிடம் கொடுத்து உச்சநீதிமன்றம் தலைமையில் விசாரனை கமிஷன் அமைக்கவேண்டும் என ஆளுநரை வலியுறுத்தவுள்ளோம்.
இந்தியாவில் 20 மாநிலங்களில் லோக்ஆயுக்தா உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஊழல்களை ஒழிக்க முடியும். சர்க்கரை ஆலை நிர்வாகம் காட்டிய அலட்சியத்தால் தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கரும்பு விவசாயிக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கவேண்டும்.
திமுக-அதிமுக இல்லாத மாற்று அணியை உருவாக்க பாமக முயற்சி மேற்கொண்டு வருகின்றது. பிப்ரவரி 15-ம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் எடுக்கப்படும் முடிவினைத் தொடர்ந்து கூட்டணி அமைக்கப்படும்.2016-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயம் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment