இடைவேளை வரை ஒருபடம், அதற்குப் பிறகு இன்னொருபடம் காட்டியிருக்கிறார்கள். முதல்பாதியில் வரும் படத்துக்குப் பெயர்தான் டூரிங்டாக்கிஸ். அந்தப்படத்தின் கதைநாயகன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்தான்.
எழுபத்தைந்து வயதிலும் தன் இளமைக்காலக் காதலியைத் தேடிப்போகும் ஒரு முதியவரைப் பற்றிய கதை என்பதால் அவரே நடித்திருக்கிறார். என் வாழ்க்கையின் எல்லாத்தருணங்களையும் ரசித்து ரசித்து வாழ்ந்தேன் என்று படத்தில் வசனம் பேசுவார். அதேபோலத்தான் ஒவ்வொரு காட்சியிலும் ரசித்துரசித்து நடித்திருக்கிறார்.
பெரியஇயக்குநர், விஜய்யின் அப்பா எல்லாவற்றையும் தாண்டி பெரியமனிதர் என்பனவற்றைச் சுத்தமாக மறந்து நடித்திருக்கிறார். தேவைக்கதிகமாகவே மதுக்குடிக்கும் புகைபிடிக்கும் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
மருத்துவர்கள் மதுவைத் தொட்டால் செத்துப்போய்விடுவாய் என்று சொன்னபிறகும், அவர்களுக்கு உடம்பைப்பற்றித்தான் தெரியும் மனதைப் பற்றித்தெரியாது என்று தான் குடித்துக்கொண்டேயிருப்பதோடு தன்னுடன் இருக்கும் இளைஞர்களுக்கும் வாங்கிக்கொடுத்துக்கொண்டேயிருக்கிறார். ஒரு முன்னோடிஇயக்குநருக்கு இது அழகா?
தன் இளமைக்காலக் காதல் பற்றி அவர் விவரிக்கும் போது அவை காட்சிகளாகவும் விரிகின்றன. அதில் இவருடைய சின்னவயதுத் தோற்றத்தில் அபிசரவணனும் நாயகியாக பாப்ரிகோஷம் நடித்திருக்கிறார்கள்.
இன்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பு என்று சொல்லுவதோடு சரி, அதற்காகச் சின்னதாகக்கூட மெனக்கெடவில்லை. உடைகள் மற்றும் காட்சிகளில் தற்காலச் சாயலே அதிகமாக இருக்கிறது.
இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் அந்தக்காட்சிகளில் எவ்வித அழுத்தமும் இல்லை. விளையாட்டுத்தனமாக இருக்கிறது. இருவரும் திருமணத்துக்கு முன்பே உறவுகொள்ளும் காட்சிகளையும் ரசித்து எடுத்திருக்கிறார்கள்.
நல்லபெண் இப்படியெல்லாம் செய்வாரா? என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக நாயகனோடு சேர்ந்து அவரும் மதுக்குடிக்கிறார் என்று காட்டிவிடுகிறார்.
ஐம்பதுவருடங்களுக்கு முன்பே காதலியோடு இருக்கும் தருணத்திலும் மதுக்குடிக்கிற மாதிரி சிந்திப்பதும் காதலியையும் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதும் எந்தக்குடும்பத்தில் நடக்கும் என்று தெரியவில்லை. அந்தக்காதல்இணையர் பிரிவதற்கான காரணமும் அழுத்தமாக இல்லை.
சிம்லா போய் பேரக்குழந்தைகளோடு வசிக்கும் அந்தப்பெண்ணைக் கண்டுபிடித்து அவரிடம் திருமணத்துக்காக வாங்கிய மோதிரத்தைக் கொடுத்துவிட்டுச் செத்துப்போவதோடு முதல்படம் முடிகிறது.
அடுத்தபடம் செல்வி 5ஆம் வகுப்பு. இந்தக்கதை எந்த வருடத்தில் நடக்கிறது என்று சொல்லப்படவில்லை. ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது. அந்தப் பேருராட்சித்தலைவரின் மகனான ரோபோசங்கரும், வார்டுஉறுப்பினர் சாய்கோபியும் சேர்ந்து கொண்டு அட்டூழியங்கள் செய்கிறார்கள்.
இதற்கு பேரூராட்சித்தலைவரான ஆடுகளம் ஜெயபாலனும் உடந்தை. அதுவும் சாதியின் அடிப்படையில். தாழ்த்தப்பட்டவர் வட்டாட்சியராக வந்து இவர்களின் மணல்கொள்ளையைத் தடுக்கமுனையும்போது அவரை உயிரோடு அந்த மணலிலேயே புதைக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் பள்ளியில் படிக்கக்கூடாது என்று பள்ளியறைக்குள் புகுந்து விரட்டியடிக்கிற வேலையைச் செய்கிறார்கள்.
நாயகி சுனுலட்சுமியின் தங்கையான 5 ஆம் வகுப்புப் படிக்கும் செல்வி, பாரதியார் பாடல்களைச் சொல்லி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறது. அன்றே அந்தக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய், பாலியல்வன்முறை செய்து கொன்று தூக்கிக்கட்டிவிடுகிறார்கள்.
இந்தக்காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம் அறுவெறுப்பூட்டுவதாக இருக்கிறது. இதனால் வெகுண்ட சுனுலட்சுமி, அவர்களைப் பழிவாங்க சபதம் ஏற்கிறார். மீண்டும் அந்த வீட்டுக்கே வேலைக்குப் போய், காபியிலும் மதுவிலும் சிறுநீரைக்கலந்து கொடுப்பது, மதுவுக்குத் தொட்டுக்கொள்ள மலத்தைக் கொடுப்பது என்று பழிவாங்குகிறார்.
இதையெல்லாம் புரட்சிகரமான சிந்தனை என்று இயக்குநர் நினைத்துக்கொண்டார் போலும். இதற்கிடையில் தன்னைப்படுக்கைக்கு அழைக்கும் ஆடுகளம்ஜெயபாலனின் பிறப்புறுப்பில் தேளை விட்டுக்கொலை செய்கிறார்.
அந்தச்சவஊர்வலத்தில் சுனுலட்சுமி ஆடும் ஆட்டம் மொத்தப்படத்திலும் மிகச்சிறப்பான காட்சி. வட்டாட்சியர் காணமால்போனதைக் கண்டுபிடிக்க அந்த ஊருக்கு வருகிற தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளர்கள் இருவரும் செய்கிற செயல்கள் பத்திரிகையாளர்களைப் பற்றிக் குறைவாக நினைக்கவைக்கும் செயல்கள்.
அந்தப்பெண்நிருபர் உடற்பயிற்சி செய்யும் போது முன்னும் பின்னும் வெறிநாய் போல அலைகிறது ஒளிப்பதிவுக்கருவி. கடைசியில் அதே 5ஆம் வகுப்பில் படிக்கும் ரோபோசங்கரின் குழந்தையே குற்றவாளிகளைச் சுட்டுக்கொல்கிறது. நெஞ்சுபொறுக்குதில்லையே என்கிற பாரதியாரின் பாடலோடு படத்தை முடிக்கிறார்கள்.
வெளியே வரும்போது இயக்குநர் எஸ்ஏசியின் சிந்தனை நன்று என்றாலும் அதைக்காட்சிப்படுத்தியிருக்கும் விதங்களை எண்ணி நமக்கும் நெஞ்சு பொறுக்கவில்லை.
No comments:
Post a Comment