Wednesday, 28 January 2015

இலங்கை பாராளுமன்றத்தில் இன்று புதிய பட்ஜெட்…!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்க்கால வரவு செலவுத்திட்டம் இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கடவுள்ளது.
இன்றைய வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதுடன் 10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளும் குறைக்கப்படவுள்ளன. குறிப்பாக சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் 50 வீதத்தினால் ரத்துச் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நிதியமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் புதிய அரசாங்கத்தின இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு உடனடி பொருளாதார நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படுகின்றது.
நாட்டு மக்கள் மத்தியில் இன்றைய இடைக்கால வரவு செலவுத்திட்டம் பாரிய எதி்ர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது. தமக்கு எவ்வாறான நிவாரணம் கிடைக்கும் என்பதில் மக்கள் பாரிய ஆர்வத்துடன் உள்ளனர். அந்தவகையில் இன்றைய இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி மாத சம்பளத்துக்கு உள்ளடங்கும் வகையில் 5000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் பொருளாதார அலுவல்கள் மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் ஹர்ஷ டி. சில்வா 5000 ரூபா சம்பள உயர்வு விடயத்தை உறுதிபடுத்தியுள்ளனர். அத்துடன் எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு மேலும் 5000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே கடந்த அரசாங்கத்தினால் செய்யப்பட்ட சம்பள அதிகரிப்பு இந்த 10000 ரூபாவுக்குள் உள்ளடங்குமா? அல்லது அதற்கு மேலதிகமாக 10000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமா என்பது இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை. இதேவேளை தனியார் துறையினருக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை குழந்தைகளுக்கான உணவு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களின் விலைகள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளபோதும் இன்றைய இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவும் எரிபொருட்களின் விலைகளங மேலும் குறிப்பிட்ட வீதத்தில் குறைக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தகவல் வௌியிடுகையில் மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் வரவு செலவுத்திட்டத்தை முன்வைப்போம். கடந்த காலங்களில் எவ்வாறான ஊழல்கள் இடம்பெற்றுள்ளன என்று தற்போது தெரிகின்றது. கடன் சுமையும் காணப்படுகின்றது.
எனினும் மக்களுக்கு வாக்குறுதியளித்தவாறு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து விடயங்களையும் உடனடியாக செய்ய முடியாது. ஆனால் 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் பல்வேறு பொருளாதார நிவாரணங்களை வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரச ஊழியருக்கு 10000 ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்குதல் மற்றும் அதன் ஆரம்பமாக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பெப்ரவரி மாத சம்பளத்திற்கு 5000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குதல், ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவில் காணப்படுகின்ற முரண்பாட்டை நீக்கி அதுவரை அவர்களுக்கு 3500 ரூபா மாதாந்த மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் உள்ளன.
அத்துடன் சமுர்ததி கொடுப்பனவை அதிகப்பட்சம்200 வீதம் வரை அதிகரித்தல், குழந்தைகளை பிரசவிக்கும் அனைத்து தாய்மாருக்கும் போசனைமிகு உணவை பெற்றுக்கொள்வதற்காக 20000 ரூபா வரையான கொடுப்பனவை பெற்றுக்கொடுத்தல், அத்தியாவசியப்பொருட்கள் பத்துக்காக அறவிடப்படும் அதிக வரியை அகற்றி விலைகளை குறைத்தல், அதற்கு இணையாக அத்தியாவசிய உணவு உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வீட்டு எரிவாயுக்கான விலையை 300 ரூபாவால் குறைத்தல், நெல் கொள்வனவுக்கான உத்தரவாத விலை ஒரு கிலோவுக்கு 50 ரூபா வரை அதிகரித்தல் உள்ளிட்ட மிக அதிகமான அம்சங்கள் தேர்தலுக்கு முன் முன்வைக்கப்பபட்ட 100 நாள் திட்டத்தில் உள்ளன.

No comments:

Post a Comment