டான்சானியாவிலுள்ள (Tanzania) ஆல்பினிசம் (Albinism) எனும் நோயால் நிறமின்மை தோலை கொண்டவர்கள், தமது சொந்த குடும்பங்களால் மிருகங்கள் போன்று வேட்டையாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நிறமின்மை தோலைக் கொண்டவர்களது உடல் பாகங்கள் அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தேடித் தரக்கூடியன என்ற நம்பிக்கை சூனியக்காரர்களிடையே நிலவி வருகின்றமையே இதற்கு காரணம் என நம்பப்படுகின்றது.
இதன்பிரகாரம் நிறமின்மை தோலைக்கொண்ட ஒருவரது மூட்டு ஒன்று 3,000 டாலர் முதல் 4,000 டாலருக்கும் முழு உடலும் சுமார் 50,000 டாலர் முதல் 75, 000 டாலர் வரைக்கும் விற்பனையாவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி பாரம்பரிய ரீதியான தோல், தலை முடி மற்றும் கண்களில் நிறப்பொருட்கள் முழுமையாக அற்ற நிறமின்மை நிலையால் பாதிக்கப்பட்ட 1,400 பேர் டான்சானியாவில் வாழ்கின்றனர்.
இந்த பாதிப்புக்குள்ளானவர்களின் படுகொலைகள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்பட ஆரம்பித்திலிருந்து இதுவரை 74 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 59 பேர் தாக்குதலுக்குள்ளாகி உயிர் தப்பியுள்ளனர். அங்கு வெளிறிய தோல் உள்ளவர்கள் துரத்தி பிடிக்கப்பட்டு அவர்களது உறுப்புகள் வெட்டி துண்டிக்கப்படுவது வழமையாகவுள்ளது.
மேலும் நிறமின்மை தோல் உள்ளவர்கள் இயற்கையாக இறக்கும் பட்சத்தில் அவர்களது கல்லறைகளிலிருந்து சடலங்கள் திருடப்படுவதும் வழமையாகவுள்ளது. இதுவரை 16 கல்லறைகளிலிருந்து நிறமின்மை இனத்தவர்களது சடலங்கள் தோண்டி அகற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பணத்தின் மீதான மோகத்தால் கணவர்மார் தமது நிறமின்மை தோலைக்கொண்ட மனைவிகளையும் பெற்றோர் தமது பிள்ளைகளையும் பலிக்கடாவாகி வருகின்றனர். டான்சானியாவிலுள்ள பல செல்வந்தர்கள் நிறமின்மை தோலைக் கொண்டவர்களது உடல் பாகங்களை பெற போட்டி போட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நிறமின்மை தோலைக்கொண்ட பென்டோ எமன்னுயலி நுன்டி என்ற 4 வயது சிறுமி கடத்தப்பட்டதையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த சிறுமியின் தந்தையும் மாமனாரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment