அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற உடற்பயிற்சி நிபுணரும் நடிகருமான கிரக் பிலிட், (greg plitt) ரயிலொன்றினால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளார். 37 வயதான கிரக் பிலிட், கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ரயில் பாதையொன்றில் விளம்பரப் படப்பிடிப்பொன்றில் பங்குபற்றியபோது ரயில் ஒன்றினால் மோதப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டழகான தோற்றம் கொண்ட கிரக் பிலிட், கெல்வின் கிளெய்ன் எனும் பிரபல உள்ளாடை நிறுவனத்தின் மாடலாக பணியாற்றியவர். பின்னர் உலகப் புகழ்பெற்றஉடற்பயிற்சி ஆலோசகராக விளங்கினார். இவர் ஒரு தீவிரமான சாகசப் பிரியரும் ஆவார்.
உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய பல சாகசங்களில் ஈடுபட்டிருந்தவர் கிரக் பிலிட். 2013 ஆம் ஆண்டில் ரயில் தண்டவாளத்தில் கிரக் பிலிட் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த காட்சி அடங்கிய வீடியோவொன்று அவர் உயிரிழந்த பின்னர் இணையத்தில் பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமையும் அவர் ரயிலை விஞ்சும் வகையிலான சாகசமொன்றில் ஈடுபட முயன்றபோதே ரயிலால் மோதப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 6 அடி ஒரு அங்குல உயரமான கிரக் பிலிட், அமெரிக்க இராணுவ கல்லூரியில் 2000 ஆம் ஆண்டு பட்டம் பெற்று அமெரிக்க இராணுவத்தில் 5 வருடகாலம் பணியாற்றியிருந்தார்.
உடற்கட்டுத் துறையில் பல விருதுகளை வென்ற அவர், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு வெளியான பாபி எனும் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். சில தொலைக்காட்சித் தொடர்களில் கிரக் பிலிட்டாவே அவர் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 வருடகாலத்தில் 250 இற்கும் அதிகமான இதழ்களின் அட்டைப்படங்களில் கிரக் பிலிட் இடம்பெற்றிருந்தார். கிரக் பிலிட்டின் திடீர் மரணம் காரணமாக அவரின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிட்னஸ் மாடலான ஜெமி இசோன் என்பவர் கூறுகையில்,
"கிரக் பிலிட் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. அச்செய்தியை அறிந்தபோது எனது இதயம் வெடித்துவிடுவதைப் போல் இருந்தது" எனக் கூறியுள்ளார்.
"கிரக் பிலிட் எப்போதும் தனது ரசிகர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் அதிகமாக செயற்பட விரும்புபவர். உடற்பயிற்சித்துறையில் அவரைப் போல் வேறொருவர் இருக்கவில்லை. வாழ்க்கையில் அவர் பல விசயங்களை சாதித்திருந்தார். அவரின் வாழ்க்கை இவ்வளவு விரைவாக முடிந்தமை வேதனைக்குரியது" என ஜெமி இசோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேற்படி விளம்பரப் படப்பிடிப்பை நடத்துவதற்கு அப் படப்பிடிப்புக் குழுவினர் முறையான அனுமதியை பெற்றிருக்கவில்லை என லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள மெட்ரோலிங் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"ரயில்பாதையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி பெறுவதில் சில நடைமுறைகள் உள்ளன" என மெட்ரோலிங் நிறுவன பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment