பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதால் அதன் விலை சம்பந்தமாக அடிக்கடி ஏற்படும் சர்ச்சைகளிலிருந்து தப்ப, இந்தியாவிலேயே பெட்ரோல் கிணறுகள் இருக்கின்றனவா என்கிற ஆராயச்சியை இந்தியஅரசு செய்கிறது.
பல்லாயிரம் கோடி செலவு செய்து செய்யப்படுகிற அந்த ஆராய்ச்சியில் வங்காளவிரிகுடாவில் பெட்ரோல் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரியவருகிறது.. இந்த ஆராயச்சியின் முடிவு அரசாங்கத்துக்குத் தெரிவதற்கு முன்பே தனியார்முதலாளிக்குத் தெரிகிறது. அந்த ஆராய்ச்சியைத் தான் செய்தது போலக் காட்டிக்கொள்ள அந்த முதலாளி முயல்கிறார். அதைப் பற்றிய விவரங்கள் தெரிந்த ஒரு காவல்அதிகாரி அதைத் தடுக்கப் போராடுகிறார் என்பதுதான் கதை.
தற்கால அரசியல் சமபந்தப்பட்ட கதையை எடுத்துக்கொண்டு தற்கால முதலாளிகளை நினைவுபடுத்துகிற மாதிரி பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அதன்படி பார்த்தால் இந்தியஅரசின் ஆய்வை தனதாக்கி அதன்மூலம் கிடைக்கும் என்று மதிப்பிடப்படும் இரண்டுலட்சம்கோடியை அடையமுயலும் முதலாளி போல ஆர்கே நடித்திருக்கிறார். அவருடைய நிறுவனத்தின் பெயர் அலையன்ஸ்.
கப்பல் விற்பனை தொடங்கி கத்திரிக்கா விற்பனை வரை அந்த நிறுவனம் செய்யும். அதனால் சிறுவியாபாரிகள் அழிந்துகொண்டிருக்கிறார்கள் என்று அவரைப் பற்றி விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. அதோடு ஒவ்வொருவனும் காலையில் எழுந்து பல்துலக்குவது தொடங்கி இரவு தூங்கப்போவது வரை என்னுடைய பொருட்களையே பயன்படுத்தவேண்டும் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் எங்கள் நிறுவனத்துக்கு மாதம் பத்தாயிரம் ரூபாயைத் தரவேண்டும் என்று முதலாளி ஆர்கே வசனம் பேசுகிறார்.
இவற்றையெல்லாம் வைத்து இவர்கள் குறிப்பிடுவது ரிலையன்ஸ் நிறுவனத்தைத்தான் என்று உணர்ந்துகொண்டால் இயக்குநர் பொறுப்பல்ல. குலுமணாலியில் ஒரு பேருந்துவிபத்து நடக்கிறது. அந்தப் பேருந்தில் பயணித்தவர்கள் எல்லாம் பெட்ரோலியஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள்.
அவர்களுடைய மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு அதை விசாரிக்கப்போக இவ்வளவு விசயங்கள் வெளியெ வருகின்றன என்று திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இந்த விசயங்களை ஆராயும் காவல்திகாரியாக பிரசாந்த் நடித்திருக்கிறார்.
படத்தில் அவர் கதாநாயகன் என்பதால் அவருடைய பாத்திரத்துக்கான அதிகாரத்தையும் மீறிப்பல இடங்களில் பயணம் செய்கிறார் என்பதைத் தாண்டி அவர் வழக்கம்போல சண்டைக்காட்சிகளில் மிரட்டுகிறார்.
கண்முன்னால் குடும்பமே அழிந்ததை எண்ணிக் கலங்குமிடத்தில் செயற்கையாக நடிக்கிறார்..காதல்காட்சிகளில் இயல்பாக இருக்கிறார். படத்தில் கார்த்திகா, பாருலயாதவ் அஸ்வினி என மூன்றுநாயகிகள் இருந்தாலும், யாருக்கும் அதிக வாய்ப்பு இல்லை.
கார்த்திகா மற்றும் பாருலுக்கு பிரசாந்தோடு தலா ஒரு பாடல்காட்சியில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அம்பானியை நினைவுபடுத்துகிற தொழிலதிபர் வேடத்தில் நடித்திருக்கும் ஆர்கே, தன் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார். முகத்தில் தாடியில்லாமல் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
படத்தில் ஆனந்தராஜ், மன்சூர்அலிகான், ராதாரவி, பிரகாஷ்ராஜ், ரோஜா என நிறையப்பேர் இருக்கிறார்கள். கொஞ்சநேரமே வந்தாலும் எல்லோருமே கவனிக்க வைக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட்கட்சியைச் சேர்ந்த தா.பாண்டியன் ஒரு காட்சியில் நடித்து சமகாலஅரசியலை விமர்சனம் செய்கிறார். அவரும் அதேபோன்ற அரசியலையே செய்துவருகிறார் என்பதை மறந்து.
லியாகத்அலிகானின் வசனங்கள் படத்துக்குப் பலம். அதுவும் பாலியல்தரகராக நடிப்பவர் பேசும் வசனங்கள் மற்றும் நீதிமன்றங்களில் பேசப்படுகின்ற விசயங்கள் கைதட்டல் வாங்குவது உறுதி.
ராஜராஜனின் ஒளிப்பதிவும் எஸ்.பி.வெங்கடேஷின் பின்னணிஇசையும் தேவையான அளவு இருக்கின்றன. பாடல்கள் பெரிதாக இல்லை. திரைக்கதை அமைப்பில் நிறைய குறைகள் இருப்பினும் சமகால அரசியல்விமர்சனங்கள் அவற்றைக் காப்பாற்றிவிடுகின்றன.
பல ஆண்டுகள் தாமதமாக இந்தப்படம் வெளியாகியிருக்கிறது. எடுத்தவுடனே வெளியிட்டிருந்தால் இது பரபரப்பாகப் பேசப்படும் படமாக இருந்திருக்கும்.
No comments:
Post a Comment