Friday, 30 January 2015

2014ம் ஆண்டின் இறுதிப் பெரும் போட்டியில் ஜோகோவிக் சாம்பியன்…!


சேர்பிய வீரர் நொவாக் ஜோகோவிக் இவ்வாண்டும் ஏடிபி வோல்டு டூர் (ATP world tour) வெற்றிக்கோப்பையை கைப்பற்றியுள்ளார்.
முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்றைய தினம் லண்டனில் நடைபெறவிருந்த இறுதிப்போட்டியிலிருந்து சுவிட்ஸர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் விலகிக்கொண்டமையை அடுத்து தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக ஜோகோவிக் சாம்பியன் கோப்பையை தனதாக்கிக்கொண்டார்.
1985- 1987 வரையான காலப்பகுதியில் இவான் லெண்டல் தொடர்ச்சியாக மூன்றாண்டு பட்டம் வென்ற பின்னர் முதற்தடவையாக அந்த சாதனையைப் புரிந்த வீரர் என்ற பெருமை ஜோகோவிக்கிற்கு கிட்டியது.
வருடத்தின் 8 முன்னணி வீரர்களுக்கிடையே நடைபெறும் ஏடிபி வோல்டு டூர் போட்டிகளில் ஜோகோவிக் முதன் முறையாக 2008ம் ஆண்டில் சாம்பியனாகியிருந்தார். அதன் பின்னர் 2012 2013 ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த அவர் தற்போது 4வது முறையாக சாம்பியனாகியுள்ளார்.
இதன் மூலம் 27வயதுடைய ஜோகோவிக் நடப்பாண்டில் உலகத்தரவரிசையில் முதலிடத்தையும் உறுதிசெய்துள்ளார். ஆண்டிறுதியில் அவர் உலகத்தரவரிசையில் முதலிடத்தை பெற்ற மூன்றாவது சந்தர்ப்பமாக இது அமைந்ததுடன் இதற்கு முன்னர் 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் அவர் முதலிடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டில் மொத்தமாக 69 போட்டிகளில் விளையாடியிருந்த ஜோகோவிக் 61 போட்டிகளில் வெற்றிபெற்றதுடன் 8 போட்டிகளில் தோல்வியைத்தழுவியிருந்தார். இதில் 11 இறுதிப்போட்டிகளுக்கு தகுதிபெற்று 7ல் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
காயம்காரணமாக இறுதிப்போட்டியில் விளையாடமல் வெளியேறும் தனது முடிவை ரொஜர் பெடரர் நேற்றையதினம் இடம்பெற்ற இரட்டையர் இறுதிப்போட்டியின் முடிவில் நிகழ்ந்த பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனைக்கு சொந்தக்காரரான 33வயதுடைய ரொஜர் பெடரர் இதுவரை ஆறு ஏடிபி வோல்டு டூர் பட்டங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment