Tuesday, 27 January 2015

என்னையும் அப்பாவையும் பிடிங்க.! அம்மாவை விடுங்க.. நாமல்


குடும்பத்தை இலக்கு வைத்து சேறு பூசல்களில் ஈடுபட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். தமது தாய் தங்க ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக பழிவாங்கல்களில் ஈடுபட வேண்டுமாயின் அதற்கு தம்மையும் தமது தந்தையையும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மாறாக, தாய் மற்றும் சகோதரர்களை இலக்கு வைத்து சேறு பூசல்களில் ஈடுபடுவது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கல்தான் பிரதான இலக்கு என்றால் என்னையும் எனது தந்தையையும் மட்டுமே இலக்கு வைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தாயார் சேறு பூசும் நோக்கில், முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி என்று சொல்லிக் கொள்ளும் பெண் ஒருவர் தங்க மோசடி குறித்து குற்றம் சுமத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையை மறைக்க முடியாது எனவும் உரிய நேரத்தில் உண்மை வெளிப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனது தாயார் சிராந்தி ராஜபக்ச எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் ஈடுபடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். திறைசேரியில் காணப்படும் தங்கத்தை கொள்ளையிட்டதாக என் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தங்க மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்று முழுதாக எனது குடும்பத்தின் சார்பில் நிராகரிக்கின்றேன். எனது தாயாருக்கும் குடும்பத்திற்கும் மிகவும் இழிவான முறையில் சேறு பூசும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரில் நானும் தந்தையும் மட்டுமெ அரசியலில் ஈடுபட்டோம். எனது தாயாரும் இரண்டு சகோதரர்களும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை.
எவருக்கேனும் அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டுமாயின் என்னையும் எனது தந்தையும் அதற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment