Monday, 26 January 2015

ராஜபக்ஷ மனைவிக்கு ஆப்பு வைத்த ஷாமலி….!


நூறு கிலோ தங்கத்தை திறைசேரியிலிருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக் ஷவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷாமலி பெரேரா இந்த முறைப்பாட்டினை அளித்தார். முறைப்பாட்டளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஷாமலி பெரேரா;
' எனது கணவர் கொழும்பு வடக்குக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஊடாக ஒரு ரகசிய தகவல் ஒன்று அவருக்கு கிடைக்கப் பெற்றது.
5000 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 100 கிலோ தங்கத்தினை திறைசேரியிலிருந்து மோசடியான முறையில் சிலர் விற்பனை செய்வதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனது கணவர் அந்த தகவலின் பிரகாரம் விசாரணைகளை நடத்தினார். இந் நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியின் பெயர் இந்த விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்டது.
அவருக்கும் இந்த தங்க விற்பனைக்கும் இடையில் தொடர்பிருப்பதாகவே இதன் போது எனது கணவரின் விசாரணைகள் ஊடாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த விசாரணைகளை நிறுத்துமாறு மேல் மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க எனது கணவரை கட்டாயப்படுத்தினார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹெட்சன் சமரசிங்க ஆகியோர் வந்து, இந்த தங்க விற்பனைக்கு ஷிராந்திக்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கை விடுமாறு எனது கணவரை கட்டாயப்படுத்தினர். அதனை தொடர்ந்து சில நாட்களிலேயே எனது கணவர் கைது செய்யப்பட்டார். அவரை சிறையிலடைத்தனர்.
எனது மகனையும் கைது செய்தனர். இது தொடர்பில் எந்த தகவலையும் வெளிப்படுத்தக் கூடாது என எனக்கும் எனது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அதனை மீறி வெளியிட்டால் எனது கணவரை நிரந்தரமாக சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டினர்.
இப்போது இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவில் முறையிடுமாறு எனது கணவர் கூறினார். அடுத்துவரும் நாட்களில் அது தொடர்பிலான அனைத்து தரவுகளையும் ஆணைக் குழுவினருக்கு வழங்க தயாராக உள்ளோம்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம், இது தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றை நடத்தி சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோருகின்றோம். என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment