ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டில் முத்திரை பதித்தவர் தனுஷ். தற்போது பால்கி இயக்கியுள்ள ஷமிதாப் படத்தில் நடித்துள்ளார். இது தனுஷ் நடிக்கும் இரண்டாவது பாலிவுட் படமாகும்.
வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசையமைத்துள்ளார்.
பால்கி, தனுஷ், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், அக்ஷரா ஹாசன் என தென்னிந்திய பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ஷமிதாப்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சத்தியபாமா கல்லூரியில் நடந்தது. கிட்டத்தட்ட 5000 மாணவ மாணவியருக்கு மத்தியில் தனுஷ், பால்கி, அக்ஷரா ஹாசன் முதலானோர் கலந்துகொண்டனர்.
அப்போது தனுஷிடம் ஒரு மாணவர், ‘‘தனுஷ், சமீபத்தில் மும்பையில் நடந்த இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வந்த ஐஸ்வர்யா ராயிடம் நீங்கள் ‘என் மாமானாருடன் நீங்க நடிச்சீங்க, உங்க மாமானாருடன் நான் நடிச்சேன்’’ என்று சொன்னீங்களா?’ என்று கேட்டதும் அரங்கமே அதிரும் வகையில் பலத்த கைத்தட்டல்களும், சிரிப்பலைகளும் மிதந்தன.
இந்த கேள்விக்கு பதில் அளித்த தனுஷ் , ‘‘உண்மையிலேயே நீங்க சொன்ன விஷயம் எனக்கு இப்பதான் தோனுச்சு! அடுத்த முறை ஐஸ்வர்யா ராயை பார்க்கும்போது இதை சொல்லி விடுகிறேன்’’ என்றார். அடுத்ததாக தனுஷிடம் ‘‘ஷமிதாப்’ படத்தை பொறுத்தவரை யார் ஷமிதாப்?’’ என்று கேட்டபோது, ‘‘இந்தப் படத்தை பொறுத்தவரை இப்படத்திற்கு இசை அமைத்துள்ள இளையராஜா சார் தான் ஷமிதாப்’’என்றார்.

No comments:
Post a Comment