இந்தியாவினதும் இலங்கையினதும் பாதுகாப்பு மற்றும் சிறந்த எதிர்காலம் என்பன பிரிக்கப்பட முடியாதவையாகும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதற்கு இந்தியா எதிர்பார்க்கின்றது என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே. சிங்கா தெரிவித்தார்.
இதன்மூலம் இந்தியாவும் இலங்கையும் சார்க் பிராந்தியமும் பயனடையும். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்துள்ள வெற்றியானது மாற்றத்துக்கான இலங்கை மக்களின் தேவைக்கு செவிசாய்ப்பதற்கான ஆணையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற 66 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே. சிங்கா அங்கு மேலும் குறிப்பிடுகையில் இலங்கையுடன் இந்தியா மிகவும் விசேடமான உறவை பகிர்ந்துகொள்கின்றது. அது வெறுமனே பூகோள காரணியல்ல. மாறாக மதம், கலாசாரம், குடும்ப தொடர்புகள், மொழி தொடர்பாடல்கள், பொருளாதார தொடர்புகள், இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான அரசியல் புரிந்துணர்வுகள் என்பவற்றினாலும் இந்த உறவு வலுவடைந்து காணப்படுகின்றது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலை அமைதியாக நடத்தியமைக்காக இலங்கை மக்களை பாராட்டுகின்றேன். மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொண்டு தொடர்ச்சியாக உதவி செய்வதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்துள்ள வெற்றியானது மாற்றத்துக்கான இலங்கை மக்களின் தேவைக்கு செவிசாய்ப்பதற்கான ஆணையாகும்.
இலங்கையும் இந்தியாவும் வலுவான பொருளாதார தொடர்புகளை அனுபவிக்கின்றன. இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு அண்மைய காலங்களில் விரிவடைந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் இலங்கையில் அக்கறை செலுத்தியுள்ளன.
''இந்தியாவில் உற்பத்தி செய்தல்'' என்ற இந்தியாவின் திட்டமானது இலங்கை நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை கொடுக்கும். தற்போதைய நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பு குறித்து கவனம் செலுத்தவேண்டும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நவீன உறவின் முக்கிய விடயமாக அபிவிருத்தி கூட்டுறவு உள்ளது.
இது பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா இலங்கையில் முன்னெடுத்துவரும் வீடமைப்பு திட்டம் சிறந்த முன்னேற்றத்தை வெளிக்காட்டியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் 16000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 27000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.
24 வருடங்களின் பின்னர் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவினதும் இலங்கையினதும் சிறந்த எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு என்பன பிரிக்கப்பட முடியாதவையாகும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதற்கு இந்தியா எதிர்பார்க்கின்றது என்றார்.
No comments:
Post a Comment