Sunday, 25 January 2015

66வது குடியரசு தினவிழா… அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!!


தமிழகத்தில் இன்று குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக காலை 8 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் முப்படை வீரர்களும் அணிவகுத்து சென்றனர்.
மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த்:
ஆங்கிலேயர்களின் அடக்கு முறையை புரட்சிகள் மற்றும் போராட்டங்கள் மூலம் எதிர்த்து, சுதந்திர இந்தியாவை பெற்றோம். தாய்நாட்டினை அந்நியர்களின் பிடியில் இருந்து காப்பாற்றி, ஒவ்வொரு மனிதனும் சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளையும், தேசத்தலைவர்களையும் இந்த நன்நாளில் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டிற்காக தன்னுயிரை கொடுத்த தியாகிகளைப் போற்ற வேண்டும். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ளது. அதில் சாதி, மதம், மொழி, இனம் என பல வேறுபாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்வோம்.
ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பேணிக்காத்திடுவோம் என சூளுரைத்து தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்:
இந்தியா குடியரசாகி உலகத்தின் மிகப்பெரிய வல்லரசாக திகழ்ந்தாலும், பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. விடுதலை பெற்றதற்கு பிறகு முதன்முறையாக வகுப்புவாதத்தை லட்சியமாக கொண்ட பா.ஜ.க. அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் இதுவரை நிலவி வந்த சமூக நல்லிணக்கத்திற்கு கடும் பாதகம் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினர் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதற்கு வகுப்புவாத சக்திகள் திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வல்லரசாக உயர்ந்த இந்திய நாட்டில் இத்தகைய சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, 120 கோடி மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைத்து உண்மையான குடியரசாக நமது நாடு விளங்கிட சூளுரை மேற்கொள்வோம். அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சரத்குமார்:
பல்வேறு இன, மத, மொழி, கலாசார வேறுபாடுகள் நிறைந்த நமது தேச மக்களை அன்புச் சங்கிலியால் பிணைத்திருப்பது மக்களாட்சித் தத்துவத்தின் மகிமை சொல்லும் குடியரசுதான் என்றால் மிகையாகாது. இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, வல்லரசு என்றும் பரிணாமத்தை நோக்கி வளர்ந்துவரும் நாடு, உலகின் எந்த ஒரு நாட்டின் சமூக, பொருளாதார மாற்றத்திலும் இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது என்ற நிலை என்னும் பல்வேறு பெருமைகளுக்கு அடித்தளம் சுதந்திர போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த லட்சக்கணக்கானவர்களின் தியாகம் தான் என்பதும் நாம் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.
இவ்வினிய குடியரசு நன்னாளில் இந்திய திருநாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவர்கள் மட்டுமின்றி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போன்ற அரசியல் தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment