Saturday, 24 January 2015

சுவிஸ்ஸில் தமிழர்கள் 3வது இடம்…!!


சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு அடைக்கலம் கேட்டு குடியேறியவர்களில், இலங்கை மக்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிஸ்ஸில், கடந்த 2014ம் ஆண்டு குடியேறியவர்களின் எண்ணிக்கை, 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மொத்தமாக, 23ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்சுவிஸ்ஸில் கடந்த ஆண்டு அடைக்கலம் கோரியுள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் 2014ல் தான் அதிக அளவு அகதிகள் சுவிஸ்ஸிற்கு இடம்பெயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தம்நாடுகளில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக, இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதில், 1277 இலங்கை மக்கள் அகதிகளாக, சுவிஸ்ஸிற்கு இடம்பெயற்ந்துள்ளதாக சுவிஸ் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது, முன்பிருந்த அகதிகள் வருகையை விட 87 சதவீதம் அதிகமாகும். மேலும், சுவிஸ்ஸில் அடைக்கலம் கோரிய மக்களில் இலங்கையர்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சுவிஸ்ஸில் அதிகப்படியான புலம்பெயர்ந்த மக்கள், ஆப்ரிக்க நாடான எரிட்ரியாவில் இருந்து வந்துள்ளனர். சுமார் 6ஆயிரம் எரிட்ரியர்கள் சுவிஸ்ஸில் சென்ற ஆண்டு புலம் பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சிரியாவில் இருந்து வரும் மக்கள் சுவிஸ் புலம்பெயர் மக்கள் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்(3,819 பேர்).
இலங்கையில், ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலை, இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமானதாக அமையும் என்று கூறப்படுகிறது. மேலும், புதிய ஆட்சியாளர்கள் சார்பில், உள்நாட்டுப் போர் காரணமாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்களை திரும்பவும் தாய்நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனால், அடுத்த ஆண்டு இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அனைத்து நாடுகளிலுமே கனிசமாகக் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment