முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலும் பாதுகாப்பு அமைச்சிலும் முறைப்பாடுகளை செய்துவருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்இரண்டாவது மகன் யோஷித்த ராஜபக் ஷவிற்கு எதிராக பாதுகாப்பு செயலாளரிடமும் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடமும் மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடு செய்துள்ளது.
ஆட்சி மாற்றத்துடன் மக்கள் விடுதலை முன்னணியினர் இலஞ்ச ஊழல் குற்றங்களுக்கு எதிராக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் தமது முறைப்பாடுகளில் அதிகமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரின் பெயர்களையும் உள்ளடக்கியுள்ளனர்.
அந்த வகையில் கடந்த வாரத்தில் இலஞ்ச ஊழல் மற்றும் தேர்தல் சூழ்ச்சிக் குற்றச்சாட்டுக்களை மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்திருந்தது. இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் உள்ளிட்ட மேலும் பலரின் பெயர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தது.
அதே போல் நேற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷ இலங்கை கடற்படையில் இணைந்து கொண்ட விதம் குறித்து விசாரணைகளை நடத்த கோரி பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாட்டினை செய்துள்ளது.
யோசித்த ராஜபக்ஷ இங்கிலாந்தின் டாக்மாத் அரச கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்ற போதிலும் அங்கு தனது பயிற்சி நெறியினை நிறைவு செய்யாமலேயே இலங்கை திரும்பி விட்டதாகவும் இலங்கை கடற்படை பயிற்சிகளை நிறைவு செய்யாது எவ்வாறு இலங்கை கடற்படையில் இணைந்து கொண்டார் என்பது தொடர்பிலும் உடனடியாக விசாரணை நடத்தப் படவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி பாதுகாப்பு செயலாளரிடம் கோரியுள்ளது.
அதேபோல் நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியினர் மீண்டும் ஒருமுறை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகவும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டினை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகளை எடுத்து உண்மைகளை நாட்டு மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment