தெலுங்கானாவில் கூலித் தொழிலாளி ஒருவர் ”ஏழைகளிடம் லஞ்சம் வாங்காதீர்கள்” என்பதை தன் உயிரை மாய்த்துக் கொண்டு கூறியுள்ளார். தெலுங்கானாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சென்ன கேசவுலு. 35 வயதான இவருக்கு 3 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். நேற்றைய முந்தினம், திங்கட்கிழமை கேசவுலு தன் மனைவியை தெலுங்கானா, மஹபூப் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு கேசவலுவின் மனைவி, ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில், கேசவலுவின் மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர் மருத்துவர்கள். சற்றும் கூச்சமின்றி அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சென்ன கேசவுலுவிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மனைவியின் நிலையைக் கருதி சில தினங்களாகக் கூலித் தொழிலுக்குச் செல்லாமல், அவருடனேயே இருந்துவிட்டதால் கேசவுலுவிடம் பணம் இல்லை. இதை மருத்துவரிடம் கூறியுள்ளார் கேசவுலு. எனவே மருத்துவர்கள், அவரது மனைவிக்கு ஏனோ தானோ என்று பட்டும் படாமல் சிகிச்சை அளித்துள்ளனர்.
தன்னால் தன் மனைவிக்கு உதவ முடியவில்லை என்ற விரக்தியில், நேற்று காலை ஒரு கடிதத்தை எழுதித் தன் பையில் வைத்துக் கொண்டு, தன் 3 வயது மகளையும் கையில் பிடித்துக் கொண்டு, அருகில் உள்ள வீரண்ணப் பேட்டை ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார் கேசவுலு.
அங்கு வேகமாக வந்த தொடர்வண்டியில், தன் மகளுடன் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் கேசவுலு. போலீசார் கெசவுலு மற்றும் அவரது மகளின் சடலத்தை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது தான், கேசவுலுவின் பையில் இருந்த கடிதம் கிடைத்தது.
இந்தக் கடிதத்தில்,
"அரசு மருத்துவமனையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது."
"எதுக்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கின்றனர்."
"இதை தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகள் எல்லாம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்."
"இதனால் என்னால் என் மனைவிக்கு சரியான சிகிச்சை பெறச் செய்ய முடியவில்லை."
"இதனால் தான் நானும் என் மகளும் தற்கொலை செய்து கொள்கிறோம்."
"இனியாவது ஏழைகளிடம் லஞ்சம் கேட்காதீர்கள்." என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக இரயில்வே போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

No comments:
Post a Comment