திருமணமாகி சில மணி நேரத்திற்குள், தனது தாயாரின் அறிவுறுத்தல் இணங்க தனது புது மனைவியை கடுமையாகத் தாக்கிய மணமகன் ஒருவர் எகிப்திய போலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி மணமகள் தலையில் காயமடைந்து மயங்கிய நிலையில் காணப்பட்டார். அவ்வேளையிலும் தனது திருமண ஆடையுடனேயே இருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மணமகனிடம் போலிஸார் விசாரணை நடத்தியபோது, மனைவியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அவரைத் தாக்குமாறு தனது தாயார் அறிவுறுத்தியதையடுத்து இந்த முட்டாள்தனமான நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
"எனது திருமண வாழ்க்கையில் மனைவியை நான் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இது உதவும் என எனது தாயார் கூறினார். எனது மூன்று சகோதரர்களும் தமது மனைவியரால் கட்டுப்படுத்தப்படுவதாக தாயார் சுட்டிக்காட்டினார். அவர்களது மணமகள்களை தாக்குமாறு எனது சகோதரர்களுக்கு வழங்கிய ஆலோசனையை அவர்கள் கேட்க்காததாலேயே இந்நிலை ஏற்பட்டது என அவர் கூறினார்" என போலிஸாரிடம் மேற்படி நபர் கூறியுள்ளார்.
"மனைவியை நான் தாக்கியவுடன் அவர் என்னை திருப்பித் தாக்கினார். அதன்பின் நான் சமையலறைக்குச் சென்று பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வந்து மனைவியின் தலையிலும் உடலிலும் தாக்கினேன்" எனவும் அவர் கூறினார். இத்தாக்குதலினால் காயமடைந்த மணமகள் கெய்ரோ நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் கணவர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment