சூதுகவ்வும், நேரம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜிகர்தண்டா’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் புகழ்க்கொடியை நாட்டினார்.
அவருடைய நடிப்பை பார்த்து ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டினர். ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு சிம்ஹாவிற்கு ஜாக்பாட் அடித்த வண்ணம் இருக்கிறது. பல படங்களில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால் அவருடைய உண்மை முகம் ஒன்று கோடம்பாக்கத்தை சுற்றிக்கொண்டிருக்கிறது.
என் வளர்ச்சிக்கு அவர்தான் காரணம் என்று பொதுமேடைகளில் புகழ்ந்தாலும், நிஜத்தில் நகத்தை கிள்ளிக் கொடுக்கக் கூட சிலர் தயங்குவார்கள். அப்படி ஒருவராகியிருக்கிறார் பாபி சிம்ஹா. ‘ஜிகிர்தண்டா’ படத்திற்காக தேசிய விருதே வாங்கப் போகும் அவரைப் பற்றி ஒரு சின்ன பிளாஷ்பேக்.
தற்போது தமிழ் சினிமாவில் ரசிகர்களால் ஓரளவு அறியப்படும் பாபி சிம்ஹாவுக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்தவரே எம்.மருதுபாண்டியன் என்ற இயக்குநர்தான். ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை இவர் எடுக்க முன் வந்தபோது பாபி சிம்ஹாவை பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட தெரியாது. அந்த படத்தின் இயக்குநர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் மருதுபாண்டியன்தான்.
படம் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கும் போதே தனது அறைத்தோழரான ‘நேரம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனிடம், ‘என் படத்துல பாபி சிம்ஹான்னு ஒரு பையன் நடிக்கிறான். அற்புதமான நடிகன். உங்க படத்துல அவனுக்கு வாய்ப்பு கொடுங்க’ என்று கேட்டிருக்கிறார். மருதுபாண்டியன் சொன்னார் என்பதற்காக பாபி சிம்ஹாவை ‘நேரம்’ படத்தில் நடிக்க வைக்கிறார் அவர். இப்படிதான் ஆரம்பித்தது பாபி சிம்ஹாவின் கேரியர்.
நடுநடுவே போராடி ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை முடித்தார் மருதுபாண்டியன். அதற்குள் உயரத்திற்கு போய்விட்டார் பாபி. இந்த படத்தில் டப்பிங் பேச வேண்டும் என்று அவரை அழைத்தபோது ‘இருபத்தைந்து லட்ச ரூபாய் கொடுத்தா பேசுறேன். இல்லேன்னா ஸாரி’ என்று பாபி கூற, அப்போதுதான் பாபி எவ்வளவு பெரிய நடிகர் என்பதையே உணர்ந்தார் மருதுபாண்டியன்.
‘இந்த படம் ரிலீஸ் ஆகி லாபம் வரட்டும். கண்டிப்பா நீங்க கேட்கிற பணத்தை நான் கொடுக்கிறேன். இப்போதைக்கு படத்தை ஏடிஎம் என்ற நிறுவனம்தான் வெளியிடுகிறது. அதனால் படம் வெளியாவதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்றாராம் மருதுபாண்டியன். ‘அப்படின்னா இந்த படத்தின் லாபத்தில் எனக்கு பாதி பங்கு கொடுப்பேன்னு அக்ரிமென்ட்ல சைன் பண்ணி கொடுங்க. அதே மாதிரி படம் வெளிவந்ததும் கணக்கு வழக்குகளை எங்கிட்ட முறையா ஒப்படைக்கணும். அதுக்கெல்லாம் சம்மதிச்சா நான் டப்பிங் பேசுறேன்’ என்று பாபி சிம்ஹா சொன்னதை அவருக்கு முதல் வாய்ப்பு கொடுத்த மருதுபாண்டியன் கூட ஏற்றுக் கொள்வார்.
ஆனால் படம் தரமாக வந்திருக்கிறது என்பதற்காகவும். அதுவும் உதவி இயக்குனர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சொன்ன படம் என்பதற்காகவும் ரசனை உள்ளத்தோடு படத்தை வெளியிடும் ஏ.டி.எம் நிறுவனம் அதற்கு எப்படி ஒப்புக் கொள்ளும்? சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் இந்த விஷயத்தில் பாபியை சமாதானப்படுத்த முன் வந்தும், ‘லாபத்தில் ஐம்பது சதவீதம் கொடுங்க. இல்லேன்னா இருபத்தைந்து லட்சம் பணம் கொடுங்க. இரண்டும் இல்லேன்னா முடியாது’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம் பாபிசிம்ஹா.
இந்த பிரச்சனையின் உச்சக்கட்டமாக ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கும் அவர் வரவில்லை. இது குறித்து பாபியை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பிய நிருபர்களிடம், ‘அந்த படத்தை பற்றி பேசாதீங்க’ என்று கூறி எஸ்கேப் ஆகி வருகிறார் அவர்.
No comments:
Post a Comment