Tuesday, 31 March 2015

8 சிரிய பிரஜைகளுக்கு தலையை துண்டித்து மரணதண்டனை…!


ஐ.எஸ். தீவிரவாதிகள், தம்மால் 8 சிரிய பிரஜைகளுக்கு தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை சமூக இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ காட்சி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த 8 பேருக்கும் மத்திய சிரிய மாகாணமான ஹமாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி வீடியோ காட்சியில் செம்மஞ்சள் நிற ஆடையணிந்திருந்த அந்த 8 பேரும் கண்கள் கட்டப்பட்டு கைகளும் முதுகுப் பக்கமாக கட்டப்பட்ட நிலையில் தீவிரவாத குழுவைச் சேர்ந்த இளவயது உறுப்பினர்களால் அழைத்துச் செல்லப்பட்டு முகமூடியணிந்த தீவிரவாதிகள் முன்பாக மண்டியிட்டு அமர பணிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து அந்த வீடியோ காட்சியில் புன்னகையுடன் காணப்படும் சிறுவன் ஒருவன் தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் கத்திகளை கையளிக்கிறான். இந்நிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ள அந்த எட்டுப் பேரும் தூய நாஸ்திகர்கள் என அந்த வீடியோ காட்சியில் தோன்றும் தீவிரவாதி ஒருவர் தெரிவிக்கிறார்.
ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகள் அந்த அமைப்பை மேலும் பலமடையச் செய்யவே வழிவகை செய்துள்ளதாக தெரிவித்த அந்த தீவிரவாதி, தமது வாள்கள் சிரிய ஜனாதிபதி பஷார் அல்– அஸாத், அவரது இனத்துவ குழுவினர் மற்றும் அவருக்கு சார்பாக போராடும் ஹிஸ்புல்லாஹ் போராளிகள் குழுவினரை விரைவில் நெருங்கவுள்ளதாக சூளுரைத்துள்ளார்.
மேற்படி தீவிரவாதிகளின் வீடியோ காட்சியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் கடந்த ஜனவரி மாதம் சிரிய எல்லைக்கு அண்மையிலுள்ள தனது சொந்த இடமான அர்ஸலில் வைத்து கடத்தப்பட்ட யுனெஸ் ஹுஜாரி என்பவர் உள்ளடங்குவதாக லெபனானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹுஜாரி கொல்லப்பட்டதை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment