சென்னை வடபழனியிலுள்ள போரம்மால் என்கிற வணிகவளாகத்தின் மேலாளராக இருக்கும் எளியவன் ஜெய், ஒலிம்பிக்கின் குத்துச்சண்டைப்போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வாங்கிய வலியவனை வெல்கிறார். எதற்காக அவருடன் மோதுகிறார் என்பதுதான் கதை.
அப்பாவியான கதாபாத்திரத்தக்குப் பொருத்தமானவன் என்பதை இந்தப்படத்திலும் காட்டியிருக்கிறார் ஜெய். முதல்பார்வையிலேயே ஐலவ்யூ சொல்லும் ஆண்டரியாவை அலட்சியமாக நிராகரிப்பதும் அடுத்த சில விநாடிகளிலிருந்து அவரைத் தேடியலையத் தொடங்குவதுமான காட்சிகளில் இயல்பாக இருக்கிறார். இறுதிக்காட்சிகளில் சிக்ஸ்பேக் என்று சொல்லப்படுகிற கட்டுடலுடன் வருகிற காட்சிகளுக்காக அவர் நிறைய மெனக்கெட்டிருந்திருக்கலாம். ஆனால் கதையில் அதற்கான வலு இல்லாததால் பொருத்தமாக இல்லை.
முழுப்படத்திலும் ஆண்ட்ரியாவைப் பார்க்கமுடியவில்லை. சில இடங்களில் நன்றாக இருக்கிறார். பல இடங்களில் நன்றாக இல்லை. எந்நேரமும் தொடைதெரிகிற மாதிரி உடையணிந்துகொண்டே வருகிறார். இயக்குநரே அவர் முகத்தை நம்பாமல் தொடையை நம்பியிருக்கிறார் என்று தெரிகிறது. ஜெய்யைக் கூட்டிக்கொண்டு உன்னைக் காதலிக்கவேண்டுமானால் நீ இவனை அடிக்கவேண்டும் என்று குத்துச்சண்டைவீரரைக் காட்டுகிறார். உடனே ஜெய்யும் அடிச்சிடறேன் என்று சொல்கிறார். அப்போதே அதிலுள்ள முன்கதையை உணரமுடிகிறது.
ஜெய் ஆண்ட்ரியாவை இணையாக நடிக்கவைப்பதென்று முடிவு செய்தது யார் என்று தெரியவில்லை. ஜெய் இளமையாகவும் ஆண்ட்ரியா முதிர்ச்சியாகவும் தெரிகிறார்கள். அழகம்பெருமாள், அனுபமாகுமார், பாலசரவணன் ஆகியோர் தங்களுக்கான வேலைகளில் குறைவைக்கவில்லை. ஆரான்சௌத்ரி என்கிற புதுநடிகர் வில்லனாக நடித்திருக்கிறார். உலகக்குத்துச்சண்டைபோட்டியில் வென்றவர் என்பதற்குப் பொருத்தமாகவே அவர் இல்லை. இமானின் இசையில் பாடல்களும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. தினேஷ்கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்துக்கு அழகு சேர்த்திருக்கிறது.
ஜெய் குடித்துவிட்டுச் செய்கிற அட்டகாசங்களில் வாந்தியெடுப்பது மட்டுமின்றி சாலையில் திரிகிற அழுக்குப்பிச்சைக்காரருக்கு உதட்டில் முத்தம் கொடுப்பதும் ஒன்று. எந்த எண்ணத்தில் இப்படி ஒரு காட்சியை இயக்குநரால் சிந்திக்கமுடிந்ததென்று தெரியவேயில்லை. ஒருமுறைக்கு இரண்டுமுறை அப்டி ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள். அப்பா அழகம்பெருமாள், அம்மா அனுபமாகுமார் ஜெய் ஆகிய மூவரும் ஒரு வணிகவளாகத்துக்குச் செல்லுகிற இடத்தில் தவறுதலாக நிகழ்ந்துவிடுகிற ஒரு விசயம்தான் இந்தப்படத்துக்கு அடிப்படை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
ஒவ்வொரு மகனுக்கும் அப்பாதான் முதல்ஹீரோ ஒவ்வொரு அப்பாவுக்கும் மகன்தான அடுத்தஹீரோ என்கிற உணர்வுப்பூர்வமான விசயத்தை அபத்தமான விசயத்துக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் குத்துச்சண்டைப்போட்டியில் பதக்கம் வென்றவரை அடி என்று ஜெய்யிடம் சொல்வதெல்லாம் எந்த அப்பாவும் செய்கிற செயலில்லை. படத்தின் தொடக்கத்திலிருந்து கடைசிவரை ஒவ்வொரு காட்சியிலும் நிறையசெலவு தெரிகிறது.
அண்ணாசாலையின் சுரங்கப்பாதை, கடற்கரை, வணிகவளாகங்கள் என்று மக்கள்கூட்டம் உள்ள இடங்களில் உண்மையான மக்கள்கூட்டம் போல துணைநடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சென்னை அண்ணாசாலை உட்பட பல முக்கியசாலைகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இரவுநேரப் படப்பிடிப்பு அதிகமாக இருக்கிறது. சென்னைக்குள் படப்பிடிப்பு நடத்துவது என்பது மிகவும் கடினமான செயல் என்பது தெரிந்தசெய்தி. இரவுநேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் அண்ணாசாலையில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
இந்தக்கதையையும் இயக்குநரையும் நம்பி இவ்வளவு தாராளமாகச் செலவு செய்திருக்கும் தயாரிப்பாளர் கே.என்,சம்பத் தான் உண்மையான வலியவன்.
No comments:
Post a Comment