சீனாவானது சமையல் எண்ணெய் கழிவை பயன்படுத்தி வர்த்தக விமானமொன்றை வெற்றிகரமாக பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளது. ஹெய்னன் விமானசேவை நிறுவனத்தால் செயற்படுத்தப்படும் போயிங் 737 – -800 ரக விமானமே இவ்வாறு சமையல் எண்ணெய் கழிவால் சக்தியூட்டப்பட்டு பறக்கவிடப்பட்டது.
சங்காய் நகரிலிருந்து பீஜிங் நகருக்கு பயணித்த மேற்படி விமானத்தில் சுமார் 100 பயணிகள் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். சீனாவில் பெருமளவான சமையல் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்படுவது பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாறியுள்ளது. மேற்படி சமையல் எண்ணெய் கழிவுகளால் சாக்கடைகள் அடைபடுவது வழமையாகவுள்ளது.
அத்துடன் இந்த கழிவு எண்ணெய்கள் நேர்மையற்ற வியாபாரிகளால் மீண்டும் முறையற்ற விதத்தில் விற்பனை செய்யப்பட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படுவது சுகாதார பிரச்சினைகள் பல தோன்றுவதற்கு காரணமாகியுள்ளது. பெரும் பிரச்சினையாக மாறியுள்ள இந்த சமையல் எண்ணெய் கழிவை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் மூலம் அதனை விமானத்திற்கான எரிபொருளாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரியல் எரிபொருள் பாவனையால் வெளியிடப்படும் கார்பன் மாசுகளின் அளவும் குறைவாகவுள்ளதால், மேற்படி எரிபொருள் பாவனை சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி போயிங் 737 – 800 ரக விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு புதிய ரக எரிபொருள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment