சவப்பெட்டி ஒன்றின் மூடி திடீரென திறந்து அதற்குள் இருந்த பெண் , “நான் எங்கிருக்கிறேன்?" என கேட்டு நல்லடக்க செயற்பாடுகளை மேற்கொள்ளும் பணியாளரை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஜெர்மனியில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
ஜெல்சென்கிர்சென் நகரில் முதியோர்களுக்கான இல்லத்தில் தங்கியிருந்த மேற்படி 92 வயதான பெண், உடலில் எதுவித அசைவும் இன்றி காணப்படுவதை கவனித்த அவரது பராமரிப்பாளர் மருத்துவர்களை வரவழைத்துள்ளார். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்திருந்தனர்.
தொடர்ந்து அந்தப் பெண் நல்லடக்க செயற்பாடுகளுக்காக மன்ஸ்டர்மான் மலர் சாலைக்கு கொண்டு வரப்பட்டார். இதன் போது உயிருடன் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட குறிப்பிட்ட பெண், சவப்பெட்டியின் மூடியைத் திறந்து மேற்கண்டவாறு கேட்டுள்ளார். இதனையடுத்து நல்லடக்க செயற்பாடுகளை மேற்கொள்வதற்குப் பொறுப்புக்குரிய பணியாளர் உடனடியாக அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுக்கவும் அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அந்தப் பெண் உயிருடன் இருப்பது தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மலர்ச்சாலை பணியாளர் விபரிக்கையில், சவப்பெட்டி இலேசாக திறந்த போது தனது கண்களை தன்னாலேயே நம்பமுடியவில்லை எனவும் அந்தப் பெட்டியினுள் இருந்த பெண் கண்கள் விழித்திருக்க தன்னை பார்த்து கேட்டபோது தனக்கு அச்சத்தில் மயக்கம் வருவது போன்று இருந்தாகவும் கூறினார். இந்த சம்பவம் தொடர்பில் போலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment