கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழக விவசாயிகள் இன்று 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழகத்தின் பல நல சங்கங்களும், கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. தமிழக விவசாயிகளின் பெரும் வாழ்வாதாரமான காவிரியின் குறுக்கில் மேகதாது, ராசிமணல் ஆகிய இரு இடங்களில் கர்நாடக அரசு ஆணை கட்ட முடிவு செய்தது.
இதற்கு தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்தது. கட்சிகளும், விவசாய சங்கங்களும் காவிரியின் குறுக்கே அணை கட்டும் தீர்மானத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த எதிர்ப்புகளை கண்டு கொள்ளாமல், அண்மையில் நடந்த கர்நாடக மாநில பட்ஜெட் கூட்டத்தில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது. இதனை அடுத்து அணை கட்டுதலுக்கு எதிராக தமிழகத்தில் முழு அடைப்பு நடத்த தமிழக விவசாய சங்கத்தினர் முடிவு செய்தனர்.
இது தொடர்பாக கடந்த சில தினங்களில், தமிழகத்தின் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல தொழிலாளர் சங்கங்களுக்கு விவசாய சங்கங்கள் 12 மணி நேர முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்தன. இதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வணிகர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அழைப்பை ஏற்றுக் கொண்ட தொழிலாளர் அமைப்புகள் இன்று காலை முதல் முழு அடைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த முழு அடைப்புப் போராட்டம் மாலை 6 மணி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த முழு அடைப்புப் போராட்டம் முழு அளவில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல பகுதிகளில் மிகக் குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சரக்கு போக்குவரத்து நிறுத்தம் இதனிடையே தமிழகம்- கர்நாடகா இடையேயான சரக்குப் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. அதே வேளை, அடைப்பு நடைபெறும் போது வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம்- கர்நாடக எல்லைப் பகுதிகளில் இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக-கர்நாடகா எல்லையான ஓசூரில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஓசூரில் ஒரு சில பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. இன்றைய போராட்டத்தின் போது ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்களும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசும் அ.தி.மு.க.வும் இந்த போராட்டத்துக்கு ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. என்றாலும், போராட்டக் குழு உறுப்பினர்கள் நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரியிருந்தனர். தமிழக பா.ஜ.க விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும் ஆனால் முழு அடைப்பு தேவையில்லை என்றும் கூறியுள்ளது. மாநிலம் முழுவதும், வன்முறை சம்பவங்கள் எங்கும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அனைத்து மாவட்ட போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று இரவில் இருந்தே சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாது, மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகள் போலீஸ் ரோந்தும் நடந்து வருகிறது. பாதுகாப்பு கருதி கர்நாடக பேருந்துகள் நேற்று இரவு போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
இன்று காலை முதல் கர்நாடக பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட வில்லை. இந்த முழு அடைப்பிற்காக இன்று தமிழக சட்ட சபையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காவிரியில் அணை கட்டும் கர்நாடகாவைக் கண்டித்தும் கர்நாடாகா அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் போது, தமிழக விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரவளித்து சட்ட சபையை இன்று நடத்தக் கூடாது என்றும் மீறி நடந்தால் புறக்கணிக்கப்படும் என்றும் தி.மு.க.,வினர் நேற்று தெரிவித்திருந்தனர். இதன் படி, இன்று நடைபெற இருந்த சட்ட சபை நிகழ்வுகள், நேற்று இரவு திடீரென ஒத்தி வைக்கப்பட்டன. இன்றைய சட்டசபை நிகழ்வுகள், வரும் திங்கட்கிழமை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment