தமிழகத்துக்கு வரும் காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இரு இடங்களில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு, மாநில பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கியது.
தமிழகத்தில் பல கட்சியினரும், தொழிலாளர் மற்றும் விவசாய சங்கங்களும் இதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தின. கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து கடந்த 28ம் தேதி தமிழகத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
சில இடங்களில் சாலை மறியல் போராட்டங்களும் இடம்பெற்றன. இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் கருத்து.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகத்தில் அணை கட்டுவதைத் தடுக்க தமிழகத்துக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், அனை கட்டுவதை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்த போது கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
‘கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ஒரு அணை கட்டி அதன் மூலம் இந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அங்கு மின் உற்பத்தி திட்டமும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
புதிய அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அரசியல் உள்நோக்கத்துடன் தமிழகம் இந்த திட்டத்தை எதிர்க்கிறது. காவிரியில் ஏதாவது திட்டத்தை செயல்படுத்தினால் அதை எதிர்ப்பதையே தமிழகம் வாடிக்கையாக கொண்டுள்ளது. தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த பிரச்சினையை எழுப்புகிறது.
அவர்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள். குடிநீர் திட்டம் என்பதால் அதை நாம் எதிர்க்கவில்லை. கிருஷ்ணா நதியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்கிறோம். தமிழ்நாடு தேவை இல்லாமல் மேகதாது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடுகிறோம். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. மழை காலங்களில் அதிகமாக தண்ணீர் சென்று அது வீணாக கடலில் கலக்கிறது. மழை அதிகமாக பெய்யும்போது 356 டி.எம்.சி. தண்ணீர் வரை கடலில் கலக்கிறது.
தமிழகத்துக்கு கொடுப்பது போக மீதம் உள்ள உபரி நீரை தேக்கி வைத்து குடிநீர் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். நமது மாநிலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். இதை எதிர்க்க அவர்களுக்கு உரிமை இல்லை. அணை கட்டுவது என்பது நமது உரிமை. அந்த உரிமையை பாதுகாப்போம்.
புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க பட்ஜெட்டில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம். தமிழகத்தின் எதிர்ப்பை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். என்று சித்தராமையா கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி (பா.ஜனதா) தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர்,
‘‘காவிரியில் அணை கட்டும் முடிவுக்கு நாங்கள் முழு ஆதரவு வழங்குகிறோம். எவ்வளவு செலவானாலும் இந்த திட்டத்தை அரசு அமல்படுத்தவேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
அதே போல் கர்நாடகத்தில் இருந்தும் அனைத்துக்கட்சி தலைவர்கள் பிரதமரை சந்தித்து நமது பிரச்சினையை எடுத்து சொல்லவேண்டும்’’ என்றார்.
அதற்கு பதிலளித்த சித்தராமையா, ‘‘இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. மேகதாதுவில் புதிய அணை கட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பாக எந்த முடிவும் எடுப்பதற்கு முன் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்போம்.
அணை கட்டும் முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. தேவைப்பட்டால் அனைத்துகட்சி தலைவர்களை டெல்லி அழைத்து சென்று பிரதமரை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.
No comments:
Post a Comment