Thursday, 26 March 2015

நதிகள் நனைவதில்லை - விமர்சனம்…!


படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார் நாயகன் பிரணவ். வேலை கிடைக்கமாட்டேனென்கிறது. அதனால் அவருடைய அப்பா பாலாசிங்கும் அக்காவும் அவரைக் கரித்துக்கொட்டுகிறார்கள்.
தங்கை கல்யாணிநாயர்தான் அவருக்கு ஆதரவாக இருக்கிறார். வேலையில்லையென்றாலும் காதல் வருகிறது. இரண்டுநாயகிகளில் ஒருவராக ரிஷா நாயகனைக் காதலிக்கிறார். தொடக்கத்தில் மறுத்துவிட்டு பின்பு காதலிக்கத் தொடங்குகிறார் நாயகன்.
நாயகனின் பக்கத்துவீட்டுக்கு நாயகி மோனிகாவும் அவருடைய அம்மாவும் குடிவருகிறார்கள். அவருக்கு அப்பா இல்லை, அண்ணன்கள் மனைவி பேச்சைக் கேட்டுக்கொண்டு இவர்களை விரட்டிவிட்டுவிட்டார்கள் என்கிற முன்கதை அவர்களுக்கு இருக்கிறது. ஒருநாள் மோனிகா வீட்டுக்குள் திருடர்கள் புகுந்துவிட நாயகன் பிரணவ் போய் சண்டைபோட்டு அவர்களை விரட்டுகிறார். அந்தச்சண்டையின்போது மாடியிலிருந்து கீழேவிழுந்து அவருக்கு ஒருகாலில் முழங்காலுக்குக் கீழே அகற்றநேர்ந்துவிடுகிறது.
நன்றாக இருக்கும்போதே திட்டித்தீர்க்கும் அப்பாவும் அக்காவும் இன்னும் பலபடி அதிகமாகத் திட்டி வீட்டைவிட்டே அனுப்பிவிடுகிறார்கள். காதலி ரிஷாவும் கைவிட்டுவிடுகிறார். இந்தநேரத்தில் மோனிகா அவரைக் காதலிக்கத் தொடங்கிவிடுகிறார். அதனால் அந்தக்கணக்குச் சரியாகிவிடுகிறது. வீட்டைவிட்டுத் துரத்திய அப்பாவும் அக்காவுமே தேடிவந்து இது என் மகன், இது என் தம்பி என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் சாதனையை நாயகன் செய்வதுதான் படம்.
பிரணவ் நன்றாக நடனம் ஆடுகிறார், சண்டையும் போடுகிறார். நடிப்பில் இன்னும் முன்னேறவேண்டும். மோனிகா முந்தைய படங்களைக் காட்டிலும் கொழுக் மொழுக்கென்று இருக்கிறார். ஒருபாடலுக்கு ஆடிக்கொண்டிருந்த ரிஷாவுக்கு இதில் ஒரு பாத்திரம் கிடைத்திருக்கிறது. பாலாசிங் கொஞ்சம் அதிகமாகவே நடித்திருக்கிறார். இப்படி ஒருஅப்பா இருப்பாரா என்கிற கேள்வியையும் இப்படி ஒருவர் இருந்துவிடவேகூடாது என்கிற எண்ணத்தையும் அவருடைய வேடம் ஏற்படுத்திவிடுகிறது.
சண்டைப்பயிற்சியாளர் தவசிராஜ் நாயகனுக்கு திரைக்குப்பின்னால் சண்டைப்பயிற்சி கொடுத்துவிட்டு திரையில் வந்து அவரிடமே அடிவாங்குகிறார். படத்தின் பெயர் மட்டுமின்றி கோபம் உன் முகத்தில் அப்பளம் பொறித்துக்கொண்டிருக்கிறது உட்பட படம் நெடுக பேசப்படும் வசனங்களும் எண்பதுகளில் வந்த படம் போல உணரவைக்கிறது.
அதிர்ஷ்டத்தை நம்புகிறவன் அரைவேக்காடு என்கிற வசனம் பேசுவதோடு கிளிசோதிடக்காரரை வைத்துக்கொண்டு சோதிடத்தை நம்புகிறவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் காட்சியமைத்திருக்கிறார் இயக்குநர் அன்பழகன்.
சௌந்தர்யனின் இசையில் படத்தின் பாடல்கள் எல்லாமே கேட்கிறமாதிரி அமைந்திருக்கின்றன. யேசுதாஸ் பாடியிருக்கும் இரண்டுபாடல்களும் அதிகவரவேற்பைப் பெறலாம். ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்கிற தன்னம்பிக்கையூட்டும் பாடலைப் போல இந்தப்படத்திலும் ஒருபாடலை வைத்திருக்கிறார்கள். பணம் வந்ததும் வந்துசேரும் உறவுகளை நாயகன் துரத்துவது பணத்தாசை பிடித்தவர்களுக்குச் சவுக்கடி.
நல்லவிசயத்தைச் சொல்ல நினைத்திருக்கும் இயக்குநர் அதைத் தற்காலத்துக்கேற்ற திரைமொழியில் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment