இலங்கையில், தனி நாடு கோரி சுமார் 30 வருடங்கள் போர் புரிந்த விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகி வருவதாக அந்நாட்டின் அரசியல் புள்ளிகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.
இலங்கையின் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜயதிலக்க மற்றும் துனை வெளியுறவு மந்திரி அஜித் பெரெரோ இருவரும், விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகி வருகின்றன என்றும், இது இலங்கைக்கு அச்சுறுத்தலானது என்றும் பேட்டி அளித்துள்ளனர்.
இது குறித்து இலங்கை துனை வெளியுறவுத் துறை மந்திரி இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை கடந்த அக்டோபர் மாதம் ஐரோப்பிய கோர்ட்டு நீக்கியது. அதுகுறித்து பிரமாண மனு அளிக்குமாறு இலங்கை அரசை கேட்டுக்கொண்டது. அதன்படி, இலங்கை அரசு, ஏராளமான ஆவணங்களை தாக்கல் செய்தது.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கினால், அவர்கள் இலங்கைக்கு மட்டுமின்றி உலக அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பது பற்றி ஐரோப்பிய பொது கவுன்சில் ஏற்கும் வகையில் ஆதாரங்களை முன்வைத்தோம். மேலும், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரனில் விக்ரமசிங்கே, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்குமாறு வலியுறுத்தினார்.
அதன்படி, விடுதலைப்புலிகள் மீதான தடையை தொடருவதாக கடந்த வாரம் ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவித்தது. விடுதலைப்புலிகள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் சொத்துகள் வாங்க முயன்ற முந்தைய ஆட்சியின் தலைவர்களுக்கு இந்த தடை பலத்த அடியாகும். களத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்கள் மீண்டும் அணி சேர முயன்று வருவது உண்மையிலேயே ஆபத்தானதுதான்.
அவர்களின் துணை அமைப்புகள் தமிழ் ஈழம் கேட்டு மீண்டும் போர் நடத்துவதற்காக, வெளிநாடுகளில் நிதி திரட்டி வருகின்றன. வெளிநாடுகளில் பெட்ரோல் பங்க்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள், கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் போன்றவற்றை நடத்துவதன் மூலம் அந்த அமைப்புகள் பணம் சேர்த்து வருகின்றன.
இலங்கையின் மறுவாழ்வுத்துறை ஆணையர், மேஜர் ஜெனரல் ஜெகத் விஜயதிலக்க கூறியதாவது:
இலங்கையில், ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரின்போது சரணடைந்த, 12 ஆயிரத்து 346 விடுதலைப் புலிகள் சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதோடு, அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளால் பயிற்சியளிக்கப்பட்ட தற்கொலைப்படை போராளிகளின் மனநிலையை மாற்றுவது என்பது கடினமான காரியமாகவே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் வாழ்வாதாரம் தொடர்பாக, உரிய நிர்வாக ஏற்பாடுகள் அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தவறினால் இலங்கையில் மீண்டும், வன்முறைகள் ஏற்படக்கூடும் என்றும் ஜெகத் விஜயதிலக்க கூறியுள்ளார்.
மேலும், 2,172 முன்னாள் போராளிகள் இன்னமும் மறைந்து வாழ்வதாகவும், அவர்களால் மீண்டும் புலிகள் இயக்கம் உருவாக்கப்படலாம்.
No comments:
Post a Comment