Tuesday, 31 March 2015

”அ.தி.மு.க., பற்றி பேச கருணாநிதிக்கு அருகதையே கிடையாது” ஓ.பி.எஸ்.


நாடெங்கும் எதிர்ப்புகள் எழுந்தும், கடந்த சில வாரங்களுக்கு முன் பாராளுமன்றத்தில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றியது மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க., அரசு.
சில கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவளித்து வரும் வேளையில், பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்து வருகின்றன. தமிழ் நாட்டில், ஆரம்பத்தில் இந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுங்கட்சியான அ.தி.மு.க., தற்போது ஆதரவளித்துள்ளது.
தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனடிப்படையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., ஜெ.,வின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை மனதில் வைத்து இந்த மசோதாவுக்கு ஆதரவளித்துள்ளதாக பகிரங்கமாக தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் மத்திய அரசின் புதிய நில கையகப்படுத்தும் சட்டத்தில் தமிழக அரசின் நிலை என்ன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதா மக்கள் நலனுக்கானது என்பதாலேயே அண்ணா தி.மு.க. ஆதரித்தது என்றும் இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.,வை. விமர்சிக்க தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அருகதை இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.
சட்ட சபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
முன்பு நடைமுறையில் இருந்த நில எடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக, ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' என்னும் சட்ட முன்வடிவை முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 2013-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அதனை சட்டமாக்கியது.
இந்தச் சட்டம் 1.1.14 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய பாரதிய ஜனதா அரசு அவசர சட்டம் மூலம் கடந்த 31.12.14 அன்று கொண்டு வந்தது. அந்த அவசர சட்டத்தை சட்டமாக்கும் வகையில் தற்போது உள்ள ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்ட திருத்த மசோதாவை லோக்சபாவில் 9.3.15 அன்று அறிமுகம் செய்தது.
அதன் மீது எதிர்க்கட்சிகள் தெரிவித்த கவலைகளின் அடிப்படையில் மத்திய பாரதிய ஜனதா அரசு மேலும் 9 திருத்தங்களை 10.3.15 அன்று தாக்கல் செய்தது. நில எடுப்பு தொடர்பாக இந்த சட்ட திருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்காக நில எடுப்புச் சட்டத்திலிருந்து சில விலக்குகள் அளிக்கப்படக் கூடாது என்பது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முடிவு ஆகும்.
அதன் அடிப்படையில், இந்த சட்டத் திருத்தத்தில் ஒரு திருத்தத்தை அ.தி.மு.க. முன்மொழிந்தது. இதனை ஏற்றுக் கொண்ட பா.ஜ.க அரசு, ஏற்கெனவே தாக்கல் செய்த சட்ட திருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மனைகளுக்கென இருந்த சலுகைகளை விலக்கிக் கொண்டு விட்டது.
எனவே, ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 2013-ம் ஆண்டு ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்ட திருத்த மசோதாவிற்கு மக்களவையில் அ.தி.மு.க. ஆதரவளித்து வாக்களித்தது. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டிற்கு, தமிழக மக்களுக்கு எவை நன்மை தரக்கூடியதோ அவற்றை மட்டுமே ஆதரிப்பது என்பதும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரானவைகளை எதிர்ப்பது என்பதும்தான் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் கொள்கையாகும்.
தற்போதும், 2013-ம் ஆண்டுக்கான நில எடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், கெயில் நிறுவனம் குழாய் பதித்திட இயலும். அவ்வாறு வழிவகை செய்யும் பெட்ரோலியம் மற்றும் மினரல் பைப்லைன் சட்டத்துக்கு முழு விலக்கு அளிக்க அந்த சட்டத்திலேயே வழிவகை செய்யப்பட்டது. அப்படியானால், அந்த சட்டம் விவசாயிகளைப் பாதுகாக்கின்ற சட்டம் என்றும், தற்போதைய சட்டத்திருத்தங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறுவதும் மக்களை ஏமாற்றும் செயல்தான்.
அரசியல் ஆதாயத்திற்காக அந்த சட்டத்தை அப்போது ஆதரித்து, தற்போது எதிர்ப்பவர்கள் இதை விளக்க வேண்டும். விவசாயிகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி அளிப்பதை ஏற்கமாட்டோம் என்று ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த திருத்தச் சட்டம், விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலதிபர்களுக்கும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும் ஆதரவானது என்றும், சொந்த நிலத்தின் மீது விவசாயிகளுக்குள்ள அடிப்படை உரிமையை இந்தச் சட்டம் எடுத்து விடுவதாகவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதைக் கேட்க அவருக்கு அருகதை இல்லை. ஏனென்றால், தமிழ்நாடு தொழிலியல் துறைக்கான நோக்கங்களுக்காக நிலத்தை கையகப்படுத்துதல் சட்டம் என்ற சட்டமுன்வடிவை 1997-ம் ஆண்டு அறிமுகம் செய்து 1999-ம் ஆண்டு அதை சட்டமாக்கியது தி.மு.க. அரசு. கடந்த தி.மு.க. ஆட்சியில் தொழிலியல் துறைக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
16 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் அப்போது வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளுக்காகவும் மாற்றம் செய்யப்பட்டது. விதிகளை மீறி நிலத்தை எடுத்துக் கொண்ட நிகழ்வுகளும் அப்போது நடந்தன. டிட்கோ, சிப்காட், சிட்கோ போன்ற நிறுவனங்கள் எந்தவொரு தனியார் தொழிற்சாலைக்காகவும் நிலங்களை கையகப்படுத்துவதில்லை.
அவை குத்தகைக்குத்தான் விடப்படுகின்றன. தொழில்பூங்காக்களுக்காக நிலம் கையகப்படுத்தும் 2013-ம் ஆண்டு சட்டத்திலேயே, அதற்காக விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று குறிப்பிடவில்லை. எனவே இப்போதுள்ள சட்டத்தில் அதற்கான ஷரத்து நீக்கப்பட்டதாகக் கூறுவது சரியல்ல. பொதுநலனுக்காக நிலத்தை கையகப்படுத்துவதை தவிர்க்க முடியாது.
ஆனால் நிலத்தை இழந்தவர்களுக்கு மறு வாழ்வும், குடியமர்வும், இழப்பீடும் கிடைத்ததா? என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த அடிப்படையில்தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தச் சட்டம், குறிப்பிட்ட சில நில எடுப்பு நிகழ்வுகளில் அத்தியாயம் 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள சமூக தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் பொதுநலன் மற்றும் 3-வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கூறுகள் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிப்பதற்கான அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குகிறது.
தொழில் வளாக வழிக்கு தேவையான நில எடுப்பு, குறிப்பிடப்பட்ட இருப்புப் பாதை மற்றும் சாலையில் இரு மருங்கும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் மட்டுமே எடுக்கப்படவேண்டும் என்றும், இந்த குறிப்பிடப்பட்ட திட்டங்களுக்கு குறையதபட்ச நிலமே எடுக்கப்பட வேண்டும் என்றும், பயிர் செய்யப்படாத நிலங்கள் ஆகியவற்றை அளவு செய்து அவற்றின் விவரங்களை தொகுத்து வைத்திருத்தல் வேண்டும் என்றும், நில எடுப்பால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளையெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிறது.
தனியார் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இந்த விதிமுறைகளின்படி நிலம் கையகப்படுத்த வழி வகை செய்தது விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா பொது நலனுக்காகவே என்பதால்தான், இதனை மக்களவையில் அ.தி.மு.க. ஆதரித்தது.

No comments:

Post a Comment