இது கதிர்வேலனின் காதல் படத்திற்கு பிறகு உதயநிதியும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்துள்ள படம் 'நண்பேன்டா’.ஜெகதீஷ் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 2-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.
இப்படம் அனைத்துத் தரப்பினரும் பார்க்கத் தக்க படம் என சென்சார் சான்று அளிக்கப்பட்ட பிறகும் தமிழக அரசின் வரிவிலக்குச் சலுகை கிடைக்கவில்லை. இதனால் வரி விலக்கு குழு மீது வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இது குறித்து அவர் கூறுகையில், "நண்பேன்டா' படம் காமெடி படமாக தயாராகி உள்ளது. நயன்தாரா மீண்டும் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். சந்தானம் ஜோடியாக ஷெரின் நடித்துள்ளார். இந்த படத்தை தமிழக அரசின் வரி விலக்கு குழுவினருக்கு காட்டினோம். படத்தைப் பார்த்து விட்டு வரிவிலக்கு அளிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக எனக்கு தகவல் வந்துள்ளது.
ஏற்கனவே என் படங்களுக்கு வரி விலக்கு அளிக்க மறுத்த குழுவினரே இந்தப் படத்தையும் பார்த்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளேன். தற்போது ‘நண்பேன்டா' படத்துக்கும் வரி விலக்கு அளிக்காததை எதிர்த்து 6 பேர் மீதும் வருகிற 30ஆம் தேதி புதிய வழக்கு தொடருவேன்," என்றார்.
மேலும் படம் குறித்து அவர் பேசும்போது, ’தமிழகம் முழுவதும் 400 தியேட்டர்களில் ‘நண்பேன்டா’ ரிலீஸ் ஆகிறது. இரண்டாவது தடவையாக இப்படத்தில் என்னுடன் நயன்தாரா இணைந்துள்ளார். நான் அவருடைய தீவிர ரசிகன். இப்படத்தில் நயன்தாராவுக்கும் எனக்கும் மோதல், காதல் என இரண்டும் கலந்து இருக்கும்.
இருவரும் சேர்ந்து ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்துள்ளோம். நான் தொடர்ந்து காமெடி படங்களில் நடிப்பதற்கான காரணம், எனக்கு காமெடி படங்கள்தான் நன்றாக வருகிறது. அதனால், ஆக்ஷன் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. அதேபோல், அரசியல் படங்களிலும் நடிக்கமாட்டேன்’என்று கூறினார்.
No comments:
Post a Comment