இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய கால் இறுதிப் போட்டியில் நடுவர்கள் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக ஐசிசி தலைவர் முஸ்தபா கமால் கூறியது ஆதரமற்றது என்று ஐசிசியின் தலைமை அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய கால் இறுதி போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 90 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆனார். ஆனால் அந்த பந்தினை நடுவர்கள் நோ பால் என்று அறிவித்தனர். இதனால் வங்கதேச ரசிகர்கள் போராட்டம் கூட நடத்தினர்.
மேலும், அவர்கள் இந்த போட்டியில் நடுவர்கள் பலமுறை ஒரு தலை பட்சமாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளனர். ஐசிசி தலைவரான முஸ்தபா கமால் இதே போல் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஐசிசியின் தலைமை அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறும் போது, ’குறிப்பிட்ட அந்த பந்தானது 50-50 போன்றது. அது நல்ல பந்தாகவும் இருக்கலாம், நோ பாலாகவும் இருக்கலாம். நடுவர் எப்படி கொடுத்தாலும் அந்த பந்தை பொறுத்தவரை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஐசிசி இந்தியாவின் ஆதிக்கத்தில் இருப்பது போல் முஸ்தபாவின் பேச்சு இருக்கின்றது.’ என்று கூறியுள்ளார்.
மேலும், ’முஸ்தபாவின் கருத்து அவரது சொந்த கருத்து தான், ஐசிசிக்கும் அதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை’ என்றும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment