மதுரையில், கிரானைட் முறைகேடுகளை விசாரணை செய்து வரும் சகாயத்துக்கு இரண்டாவது முறையாக கடிதம் மூலம், கொலை மிரட்டல் வந்துள்ளது. மதுரையில் நடக்கும் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய மதுரை சென்றுள்ளார் சட்ட ஆணையர் சகாயம்.
மதுரையில் சகயாம் மேற்கொண்ட விசாரணையில், கிரானைட் குவாரிகளால் நரபலி, பாரம்பரிய சின்னங்கள் அழிக்கப்பட்டது, கிணறுகள் மற்றும் கன்மாயிகள் அழிக்கப்பட்டது என பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. சகாயத்தின் இந்த விசாரணைக்கு பல இடையூறுகள் ஏற்பட்டன.
ஒரு புகார் கடிதத்தில் கொலை மிரட்டலும் வந்தது. கடைசியாக அவரது அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸும் வந்தது. இதை எல்லாம் தாண்டி, எட்டு கட்ட விசாரணையை முடித்த சகாயம் குழு இடைக்கால அறிகையை கடந்த சில தினங்களுக்கு முன் உயர் நீதிமன்றத்தில் சமர்பித்தது.
இதனை அடுத்து 9ம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார் சகாயம். விசாரணையின் தொடக்கத்தில் தனக்கு வந்த புகார் கடிதங்களை பிரித்து பார்த்த போது, அதில் ஒரு மொட்டை கடிதத்தில், கிரானைட் விசாரணையின் உண்மையான அறிக்கையை கொடுக்கக் கூடாது.
உண்மையான அறிக்கை கொடுத்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். எனவே உண்மையான அறிக்கைக்கு பதில் சாதாரண அறிக்கை கொடுக்க வேண்டும். அதை மீறி கொடுத்தால் டிசம்பர் மாதத்திற்குள் உங்களை கொலை செய்து விடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து இந்த கடிதம் குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்துள்ளார். இந்த கடிதத்தை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இந்த கடிதம் சென்னையில் இருந்து வந்ததாக மட்டும் தெரியவந்துள்ளது.
பின்னணி
கடிதத்தில், அரசைச் சம்பந்தப்படுத்தி குறிப்பிட்டதால் மாத்திரம் இது அரசுத் துறைச் சார்ந்தோரின் வேலை என்று கிசு கிசுக்கப்படவில்லை. இந்த விசாரணையின் பின்னணியை அலசிப் பார்த்தால் சகாயத்துக்கு அரசு அதிகாரிகள் ஏன் இடைஞ்சல் என்பது தெரியவரும். கடந்த ஜனவரி 12ம் நாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் குழு இடைக்கால அறிக்கையை சமர்பித்தது.
இந்த அறிக்கையில், மதுரை கிரானைட் முறைகேட்டால் மட்டும் அரசிற்க்கு சுமார் 12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த முறைகேட்டில், பல முன்னாள், மற்றும் தற்போதைய அமைச்சர்களுக்கும் பங்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரானைட் கொள்ளை தொடர்பான முறைகேடுகளை மறைக்க இன்றும் பல சட்ட மீறல்கள் நடந்து வருகின்றன. சகாயத்தின் இந்த விசாரணையில் இடையூறு செய்ய வேண்டும் என்பதில், ஆளும் கட்சியான அ.தி.மு.க மட்டும் அல்ல, தி.மு.க புள்ளிகளும் ஆர்வமாக உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:
Post a Comment