பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வரும் வேளையில் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களே ‘பிட்’ கொடுக்கும் கொடுமை பீகாரில் நடைபெற்று வருகிறது.
பீகாரில் கடந்த 17ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றுவருகிறது. இதில் 1,217 மையங்களில் 14 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இந்நிலையில், பீகார் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் நேற்று முன்தினம் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல மாடிகளை கொண்ட அந்த தேர்வு மையத்தை சுற்றிலும் ஏராளமான பேர் நின்று கொண்டிருந்தனர்.
மேலும் பல பேர் அந்த கட்டிடத்தின் மேல் ஏறி ஜன்னல் பகுதியில் நின்று கொண்டு உள்ளே பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, ‘காப்பி‘ அடிப்பதற்காக ஜன்னல் வழியாக ‘பிட்‘டுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கிழித்து கொடுத்தனர்.
மேலே ஜன்னல்களில் ஏற முடியாதவர்கள், நீண்ட கம்பின் நுனியில் வைத்து ஜன்னல் வழியாக உள்ளே கொடுத்தார்கள். மேலும் சிலர் கீழே நின்றபடி ‘பிட்‘ காகிதங்களை சுருட்டி உள்ளே வீசினார்கள். தேர்வு அறைகளில் இருந்த எல்லா மாணவர்களுமே கிட்டத்தட்ட ‘பிட்‘டோடுதான் பரீட்சையை எழுதினார்கள்.
நாம் அதிர்ச்சியாகும் இந்த விஷயத்தை கண்டு, அந்த ஊர் மக்கள் சாதரணமாக கடந்து சென்றனர். ஆனால் அந்த வழியாக சென்ற பத்திரிகை புகைப்படக்காரர்கள் இந்த அபூர்வ காட்சியை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து பீகார் பள்ளி தேர்வு வாரிய தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் கூறுகையில், நியாயமற்ற முறையில் பரீட்சை எழுதிய மாணவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட 3 பாட தேர்வுகளில் காப்பி அடித்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிடிபட்டதாகவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment