கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் ’லிங்கா. இப்படத்தால் நாங்கள் பெருத்த நஷ்டம் அடைந்து விட்டோம் என்று ஒவ்வொரு நாளும் போராட்டங்கள், நடத்தி வந்தனர் விநியோகஸ்தர்கள்.
மேலும் லிங்கா படத்தினால் பெரிய அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இப்பிரச்னையில் ரஜினிகாந்த் தலையிட்டு தயாரிப்பாளரிடம் நஷ்டத் தொகையை பெற்றுத் தரவேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தொடர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தற்போது இப்பிரச்னையை ரஜினிகாந்த் முடித்து வைத்துள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத் தலைவர் கலைப்புலி தாணு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்: ஒரு பெரிய தொகையை இழப்பீடாகக் கொடுத்து "லிங்கா' திரைப்படம் தொடர்பான பிரச்னைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தத் தகவலை 10 நாள்களுக்கு முன்பே "லிங்கா' படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூலம் எங்களுக்குத் தெரிவித்து விட்டார். அந்தத் தொகையும் எங்களுக்கு வந்து விட்டது. எங்களிடம்தான் உள்ளது. இந்தத் தொகையை விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பிரித்துக் கொள்வதில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
எனவே, இனி இந்தப் பிரச்னைக்கும் ரஜினிகாந்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழ்த் திரையுலகின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment