மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளது. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதா, தமிழக வேளாண்துறை அதிகாரி தற்கொலை உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியினர் தாங்களும் கட்சிக் காரர்கள் தான் என்பதைக் காட்டுவதற்காக, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனராம். வரும் 23ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதில், திருச்சி ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் புது முக உறுப்பினர் குஷ்பு பங்கேற்கிறார். இப்போதைக்கு தமிழ் நாட்டில் காங்கிரஸின் முக்கிய அடையாளங்களில் ஒருவர் என்ற அளவிற்கு இவர் பிரபலமைடைந்துவிட்டார். கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவர்ன் சென்னையிலும், சிவகங்கையில் ப.சிதம்பரமும் தலைமை ஏற்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத்திய பா.ஜ.க. அரசு மக்களவையில் நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை (விவசாயிகளின் உரிமைகளை பறிக்கிற கருப்புச் சட்டத்தை)எதிர்த்துத் தமிழகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 23, 2015 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப் பட்டுள்ளது.
விவசாயிகளின் உரிமைகளை பறிக்கிற கருப்புச் சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இச்சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்து விவசாய விரோதப் போக்கை வெளிப்படுத்தி உள்ளது. மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கினை கண்டிக்கிற வகையில் இப்போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாவட்டந்தோறும் நடத்துகிறது.

No comments:
Post a Comment