Tuesday, 24 March 2015

இறுதியில் நியூசி!!! மைதானத்திலேயே கதறி அழுத தெ.ஆ., வீரர்கள்!!!


ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 2015-ன் முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்க மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் இரு அணிகளுமே உலகக் கோப்பை வரலாற்றில் முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு செல்லும் முனைப்புடன் பலமான போட்டியுடன் விளையாடியது.
டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அரையிறுதிக்கு முன்னேறும் தீர்மானத்துடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தனர்.
ஆம்லா 10 ரன்களுக்கும், டி காக் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய டியூ ப்ளேசிஸ் மற்றும் ரூசோவ் இருவரும் நிதானமாக ஆடி அணிக்கு ரன் சேர்த்தனர். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்தது. 53 பந்துகளுக்கு 39 ரன்கள் எடுத்த ரூசோவ் ஆன்டர்சன் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டி வில்லியர்ஸ் அபாரமாக ஆடினார். மழை காரணமாக சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டமானது மீண்டும் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனால், தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுத்தது.
எனினும் விதிமுறைப்படி 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நியூசிக்கு இலக்கு நிரணயிக்கப்பட்டது. டி வில்லியர்ஸ் 65 ரன்களும், டியூ ப்ளேசிஸ் 82 ரன்களும், மில்லர் 49 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய நியூசி அணியின் கேப்டனும், துவக்க ஆட்டக்காரருமான மெக்கல்லம் அபாரமான துவக்கத்தை கொடுத்தார்.
இவர் 32 பந்துகளுக்கு 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வில்லியம்சனும் 6 ரன்களுடன் வெளியேற, அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் அடித்தது. தொடர்ந்து குப்தில் 34 ரன்களுடனும், டெய்லர் 30 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். இதனால் நியூசி இந்தமுறையும் இறுதி வாய்ப்பை இழந்துவிடுமோ என்று ரசிகர்கள் இடிந்து போயினர்.
தொடர்ந்து விளையாடிய கோரி ஆன்டர்சன் மற்றும் எலியட் ஜோடி நிதானமாகவும் அதிரடியாகவும் ரன் சேர்க்கத் தொடங்கினர். ஆன்டர்சன் 58 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். எந்த அணியும் ஜெயிக்கலாம் என்று சென்று கொண்டிருந்த நிலையில் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் எலியட் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.
தென் ஆப்ரிக்க சார்பில் மார்கல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு செல்ல கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட தென் ஆப்ரிக்க வீரர்கள் மைதானத்திலிருந்து அழுதுகொண்டே வெளியேறினர்.
வியாழக்கிழமை நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் ஜெயிக்கும் அணியுடன் வருகிற ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து விளையாடும்.

No comments:

Post a Comment