Saturday, 21 March 2015

ஆப்பிரிக்க நாடுகளில் வெளியாகும் முதல் படம் நான் ஈ...!


கடந்த 2012ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், நானி, சமந்தா, சுதீப் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ’நான் ஈ’.
ஒரு ஈயை வைத்து இந்த அளவிற்கு ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் படத்தைக் கொடுக்க முடியுமா என்று இந்தியத் திரையுலகமே அப்போது ஆச்சரியப்பட்டது. முதலில் இந்தப் படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டாலும் பிறகு பல இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது இப்படம் கிழக்கு ஆப்பிரிக்காவில் அதிக மக்களால் பேசப்படக் கூடிய ஸ்வாஹிலி என்ற மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ஒரு தெலுங்குப் படம் அந்த மொழியில் டப்பிங் செய்யப்படுவது இதுவே முதல் முறை.
கிழக்கு ஆப்பிரிக்கா, தான்ஸானியா, கென்யா, உகாண்டா, வாண்டா, புருன்டி, காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளில் வெளியாகும் இப்படத்திற்கு ‘இன்ஸி’ (INZI) என டைட்டில் வைத்திருக்கிறார்கள். அதன் கீழே ‘கிஸாஸி சா விஷோ’ (Kisasi Cha Mwisho) என டேக் லைனும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு ‘ஈயின் உச்சகட்ட பழிவாங்கல்’ என அர்த்தமாம். தான்ஸானியாவைச் சேர்ந்த ஸ்டெப்ஸ் என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் ‘ஈகா’வின் ‘ஸ்வாஹிலி’ மொழிப் படத்தை ஆப்பிரிக்க நாடுகளில் வெளியிடுகிறது.

No comments:

Post a Comment