Tuesday, 24 March 2015

என் பெயரை பயன்படுத்த தனுஷ் அப்பாவிற்கு எந்த உரிமையும் இல்லை.. ரஜினி


எட்டுப்பட்டி ராசா, துள்ளுவதோ இளமை போன்ற படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. இவரது மகன்களான செல்வராகவன், தனுஷ் இருவருமே திரையுலகில் முக்கிய பிரபலமாக இருக்கின்றனர்.
இதில் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இந்த நிலை நடிகர் ரஜினிகாந்த் தனுஷின் அப்பாவான கஸ்தூரிராஜா, எந்த இடத்திலும் தனது பெயரைப் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் பெயரில் 'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’என்ற இந்தி படத்தை மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரம் தரம் தாழ்ந்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சினிமா பைனான்ஸ்சியர் முகுல்சந்த் போத்ரா, வழக்கில் தன்னையும் ஒரு மனு தாரராக சேர்த்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இந்தி திரைப்படத்தில் தனது பெயரை பயன்படுத்த ரஜினி தடை உத்தரவு பெற்றுள்ளார். இயக்குநர் கஸ்தூரி ராஜா, என்னிடம் கடன் கேட்டார். நான் தர மறுத்து விட்டேன். அப்போது, ‘நான் பணம் தரவில்லை என்றால், என் சம்மந்தி ரஜினிகாந்த் தருவார் என்று கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்து, கடனை வாங்கினார்.
ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பதால், நானும் கடன் கொடுத்தேன். ஆனால் சொன்னப்படி கடன் தொகை முழுவதையும் கஸ்தூரிராஜா கொடுக்கவில்லை. இதுகுறித்து செய்தி ஊடகங்களிலும் வெளியானது. ஆனால், இதுதொடர்பாக ரஜினிகாந்த் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், வடஇந்தியாவில் எடுக்கப்படும் படத்தினால், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக கூறி ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்து தடை பெற்றுள்ளார்.
தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சம்மந்தி விவகாரத்தில் அவர் தலையிடாமல் உள்ளார். எனவே, இந்த வழக்கில் என்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ரஜினி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், என்னைப் பற்றி படம் தயாரித்த பட நிறுவனத்துக்கு எதிராகத்தான் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
அதற்கும், போத்ராவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரது மனு விசாரணைக்கு உகந்தல்ல. இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு, எனது பெயரைப் பயன்படுத்திக் கொள்ள எந்த அதிகாரமும், வாக்குறுதியும் அளிக்கவில்லை. அது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, போத்ராவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment